குழந்தைக் கடத்துவதாக பெண்ணை கட்டி வைத்து அடித்த பொதுமக்கள் 


மேலூர் அருகே குழந்தைக் கடத்த வந்ததாக நினைத்து பெண் ஒருவரை கட்டி வைத்து அடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே பதினெட்டான்குடி கிராமத்தில் நைட்டி அணிந்த பெண் ஒருவர், கையில் பிஸ்கட் பாக்கெட்களுடன் பையில் வைத்து சுற்றிவந்துள்ளார். இதனை கண்ட பொதுமக்கள் குழந்தை கடத்த வந்ததாக சில நாட்களாக வாட்ஸ் அப்பில் பரவியதையடுத்து சந்தேகத்தின் பேரில் பொதுமக்கள் அவரை கட்டிவைத்து அடித்து விசாரிக்க ஆரம்பித்தனர். இந்தத் தகவல் மேலூர் காவல்துறையினருக்கு கிடைக்கவே உடனடியாக விரைந்து சென்ற அவர்கள்  பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.


 
இந்நிலையில் காவல்துறையினரிடம் தங்கள் ஊருக்கு 2 பெண்கள் வந்ததாகவும், அதில் ஒருவர் தப்பியோடிவிட்டதாகவும் பிஸ்கட் பாக்கெட்டுகளுடன் குழந்தைகளிடம் இவர்கள் நெருங்கி வந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். பின்னர் அந்தப் பெண் யார்?  ஏன் கைகளில் பிஸ்கட் பாக்கெட்டுகளுடன் திரிய வேண்டும்? குழந்தை கடத்த வந்தவர்தானா என்பன பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அந்தப் பெண் பார்ப்பதற்கு வடமாநிலத்தை சேர்ந்தவர் போல தென்பட்டாலும் வாய்பேச மறுத்து வருகிறார். காவல்துறை தரப்பில் அந்தப் பெண் மனநிலை சரியில்லாதவராக கூட இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தால் மேலூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS