காவல் நிலையம் எதிரே பெண் வெட்டி படுகொலை


வேலூர் - ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு வெளியே வந்த பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த செங்காடு பகுதியை சேர்ந்தவர் சுகுணா(45). கணவனை இழந்த இவர், நேற்று மாலை ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு வெளியே வந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் காவல் நிலையத்தில் வெளியே சென்று கொண்டிருந்த சுகுணாவை கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்ப்படுத்தியது. இக்கொலை குறித்து காவல்துறை மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில், வாங்கூர் பகுதியை சேர்ந்த சுரேந்திரன் என்பவருக்கும் இறந்து போன சுகுணா என்பவருக்கும் மறைமுக தொடர்பு இருந்ததாகவும், நேற்று மாலை சுகுணாவின் வீட்டுக்கு குடித்துவிட்டு சென்ற சுரேந்திரன் சுகுணாவை பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அங்கிருந்த செங்கலால் சுகுணாவை தாக்கிவிட்டு வீட்டில் இருந்த 1000 ரூபாயை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். தான் தாக்கப்பட்டது தொடர்பாகவே சுரேந்திரன் மீது ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுகுணா புகார் அளிக்க வந்துள்ளார். இதை அறிந்த சுரேந்திரன் சுகுணாவை பின் தொடர்ந்து வந்து காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த போது காவல் நிலையத்தில் இருந்து 20 அடி தூரத்தில் கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். 

இச்சம்பவம் குறித்து ராணிப்பேட்டை டிஎஸ்பி கலைச்செல்வன் விசாரணை மேற்க்கொண்டார். பின்னர் வெட்டி கொலை செய்யப்பட்ட சுகுணாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து ராணிப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள சுரேந்திரனை தேடிவருகின்றனர்.
 

தகவல்கள் : ச.குமரவேல்,செய்தியாளர் - வேலூர் 

POST COMMENTS VIEW COMMENTS