ஸ்மார்ட்போன் கேட்டு தந்தையை மண்வெட்டியால் வெட்டிய மகன் 


ஸ்மார்ட்போன் வாங்க பணம் தர மறுத்த தந்தையை மகன் மண்வெட்டியால் கொன்ற சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஃபெடாபூர் மாவட்டத்திலுள்ள குல்கேதா பகுதியை சேர்ந்த விவசாயி கிருஷ்ணகுமார். இவருக்கு ப்ரிச், மன்னு, ஆனந்த் மற்றும் கான்ஷ்யாம் என்ற நான்கு மகன்கள் உள்ளனர். இதில் முதல் மகன் ப்ரிச் திருமணம் நடைபெற்று, அதே பகுதியில் குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார். எனவே மனைவி மற்றும் மற்ற மூன்று மகன்களுடன் கிருஷ்ணகுமார் வசித்து வந்தார். இதில் இளைய மகன் ஆனந்த தனக்கு ஸ்மார்ட்போன் வாங்க பணம் வேண்டும் என கிருஷ்ணகுமாரிடம் கேட்டுள்ளார். 

அவரிடம் போதிய பணம் இல்லாததால் தர மறுத்துள்ளார். இருப்பினும் அடிக்கடி ஸ்மார்ட்போனுக்கு பணம் வேண்டும் எனக்கூறி கிருஷ்ணகுமாரை ஆனந்த் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு பணம் கேட்ட ஆனந்த் தனது தந்தையை மிரட்டும் வகையில் நடந்துகொண்டுள்ளார். அப்போது பணம் தர முடியாது எனக்கூறி கிருஷ்ணகுமார் மறுத்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஆனந்த், கிணத்தடியில் உள்ள பம்பு செட்டிற்கு அருகே கிடந்த மண்வெட்டியை எடுத்து தனது தந்தையை சரமாரியாக வெட்டியுள்ளார்.

 

ஆனந்தை தடுக்க முயன்றுகொண்டே, பலத்த சத்தத்துடன் கிருஷ்ணகுமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ஆனந்தை பிடிக்க முயன்றுள்ளனர். அதற்குள் கிருஷ்ணகுமார் படுகாயமடைந்துவிட்டார். அத்துடன் மண்வெட்டியை காட்டி அக்கம்பக்கத்தினரை மிரட்டி ஆனந்த் குமார் தப்பிக்க முயற்சித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட, அவர்கள் வந்து ஆனந்தை கைது செய்துள்ளனர். ஆனால் படுகாயமடைந்த கிருஷ்ணகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். ஸ்மார்ட்போன் வாங்க பணம் தர மறுத்ததால், சொந்த தந்தையை மகனே கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS