சொந்த அக்காவை விஷம் வைத்து கொன்ற பெண் கைது 


சென்னையில் தவறான உறவை கண்டித்த அக்கா மற்றும் அவரது கணவரை விஷம் வைத்துக்கொன்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.           

சென்னை மயிலாப்பூர் சித்திரைகுளம் பகுதியை சேர்ந்தவர்கள் தர்மலிங்கம்- மீனாட்சி தம்பதி. இவர்கள் அதே பகுதியில் பூக்கடை நடத்தி வந்தனர். மீனாட்சியின் சகோதரி் மைதிலி. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் மைதிலிக்கும் பாலமுருகன் என்ற இளைஞருக்கும் தவறான உறவு ஏற்பட்டுள்ளது. இதை தர்மலிங்கம்- மீனாட்சி தம்பதி கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மைதிலி, பாலமுருகனுடன் சேர்ந்து தர்மலிங்கம்- மீனாட்சி தம்பதியை  கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். 

                      

இதையடுத்து தர்மலிங்கத்துக்கு மதுவிலும், மீனாட்சிக்கு உணவிலும் விஷம் கலந்து கொடுத்துள்ளனர். தர்மலிங்கம் கடந்த 2017 ஜனவரி 9ம் தேதியும், மீனாட்சி ஜனவரி 13ம் தேதியும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இந்த நிலையில் சாவில் மர்மம் இருப்பதாக தர்மலிங்கத்தின் சகோதரர்  குமார் மயிலாப்பூர் போலீசாரிடம் புகார் செய்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் இருவரும் விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரியவந்தது. 

ஆனால் விஷம் வைத்தது யார் என தெரியாமல் இருந்தது. இதுகுறித்து உறவினர்கள் அனைவரிடமும் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வந்தனர். இதில் மைதிலியும் பாலமுருகனும் சேர்ந்து, தர்மலிங்கம் - மீனாட்சி தம்பதியை கொலை செய்தது தெரியவந்தது. மேலும், தம்பதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவர்களிடம் கையெழுத்து பெற்று வங்கி கணக்கில் இருந்த ரூ. 18 லட்சத்தையும் இருவரும் சுருட்டியுள்ளனர். இருவரையும் ஒன்றரை ஆண்டுக்கு பின் மயிலாப்பூர் போலீசார் இன்று கைது செய்தனர்.
 

POST COMMENTS VIEW COMMENTS