பெண்களை குறிவைத்து நடக்கும் ஆன்லைன் “கிட்னி”மோசடி


ஒரு கிட்னியை தானமாக கொடுத்தால் 1.5 கோடி ரூபாய் கிடைக்கும் என நம்பி சென்னை பெண் ஒருவர் தனது 6 லட்ச ரூபாய் பணத்தை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் ரஞ்சிதா. வயது 26. ரஞ்சிதாவின் பெற்றோருக்கு ஹவுசிங் லோன் உள்ளிட்ட பணப் பிரச்னை இருந்துள்ளது. இதனால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் தான் ரஞ்சிதாவின் மின்னஞ்சலுக்கு ஒரு மெயில் வந்துள்ளது. அதில் பணக்காரர் ஒருவருக்கு கிட்னி தேவைப்படுவதாகவும், ஒரு கிட்னியை தானமாக கொடுத்தால் 1.5 கோடி ரூபாய் கொடுப்பதாகவும் அந்த மெயிலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. வீட்டில் பணக் கஷ்டத்தில் இருந்துள்ள ரஞ்சிதா, 1.5 கோடி ரூபாய்க்கு ஆசைப்பட்டு தனது ஒரு கிட்னியை தானமாக கொடுக்க முடிவு செய்துள்ளார். globalhospital24hours@gmail.com என்ற மின்னஞ்சலில் இருந்துதான் ரஞ்சிதாவிற்கு மெயில் வந்துள்ளது. சர்ஜரிக்கு முன்னால் 80 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துவிடுமோம். சர்ஜரிக்கு பின்னர் மீதமுள்ள தொகை கொடுக்கப்படும் என்றுதான் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் அட்வான்ஸ் தொகையை வாங்கிவிட்டு கிட்னி கொடுக்க மறுத்தால் சிறைக்கு செல்ல நேரிடும் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

அனைத்திற்கும் ஒகே என சொல்லிவிட்டு கிட்னியை கொடுக்க துணிந்திருக்கிறார் ரஞ்சிதா. பின்னர் நான் விருப்பட்டு தான் கிட்னி கொடுக்கிறேன் என்ற சான்றிதழ் பெற ரூபாய் 40,000 செலுத்துமாறு ரஞ்சிதாவிடம் கூறியிருக்கின்றனர். ரஞ்சிதா அந்த பணத்தை செலுத்திய பின்னர் அதற்கு அடுத்த வேறு ஒரு காரணத்தை கூறி ரூபாய் 35,000 கேட்டிருக்கின்றனர். அதனையும் ரஞ்சிதா உடனே ஆன்லைன் வழியாக செலுத்திவிட்டார். பின்னர் வெளி நாட்டில் இருந்து வங்கி கணக்கில் பணத்தை அனுப்ப நிறைய நடைமுறைகள் இருப்பதாக கூறி அடிக்கடி பணம் கேட்க ஆரம்பித்திருக்கின்றனர்.

இப்படி இவர் கட்டியே பணமே ரூபாய் 6 லட்சத்தை நெருங்கிவிட்டது. முதலில் இதுபோன்று எந்தவித விதிமுறையும் கூறாமல், இடையிடையே பணம் கறக்க ஆரம்பித்திருக்கின்றனர். ஒவ்வொரு முறையும் இதுதான் கடைசி முறை.. இவ்வளவு பணத்தை செலுத்தினால் போதும் என ஏமாற்றி பணத்தை கறந்துள்ளனர். அதையும் நம்பியே ஒவ்வொரு முறையும் ரஞ்சிதா பணத்தை செலுத்தியிருக்கிறார். ஆனால் ரூபாய் 6 லட்சம் அளவில் செலுத்திய பின்பு இதற்கு மேலும், பணம் செலுத்த முடியாது என்ற நிலையில் தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியிருக்கிறார் ரஞ்சிதா. நான் கிட்னி கொடுக்கவில்லை.. நான் கட்டிய பணத்தை கொடுத்துவிடுங்கள் என ரஞ்சிதா கூறியதற்கு பணத்தை திரும்ப செலுத்த வேண்டுமானால், அதற்கும் கமிஷன் கேட்டிருக்கின்றனர்.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரஞ்சிதா கதறி அழுதுள்ளார். பின்னர் இந்த ஆன்லைன் மோசடி குறித்து சென்னை மாநகர காவல்துறையிடம் ரஞ்சிதா புகார் அளித்துள்ளார். குடும்பத்தின் சூழ்நிலை கருதி ரஞ்சிதா வீட்டில் யாரிடமும் முதலில் இதுகுறித்து தெரிவிக்கவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பின்பு வீட்டில் உள்ள அனைவரிடமும் தெரிவித்துவிட்டு போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். போலீசாரும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். 

பொதுவாகவே ஆன்லைனின் விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தும் காவல்துறையினர், அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு இதுபோன்ற மோசடி கும்பலிடம் சிக்காமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS