“ஜியோவை மிஞ்சும் ஆஃபர்” - சிக்கிய இமாலய மோசடி மன்னன்!


தூத்துக்குடியில் பெண்களை வைத்து ஆசை வார்த்தை கூறி நூதன மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகர்கோவிலை சேர்ந்த அந்தோணி செல்வராஜ் என்பவர் தூத்துக்குடியில் தொழில் பயிற்சி நிறுவனம் நடத்துவதாக கூறி தூத்துக்குடி பிரைன்நகரில் வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து உள்ளார். பின்னர் அதில் ‘இமாலயா’ என்ற  பெயரில் கார்ப்பரேஷன் நிறுவனம் நடத்தி வந்து உள்ளார். இந்த நிறுவனத்தில் பணிபுரிய 28 பெண்களை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு செல்போன் வாங்கி கொடுத்து, அந்தப் பெண்களின் முகவரியை வைத்தே சிம் கார்டும் வாங்கி கொடுத்துள்ளார்.

பின்னர் அந்தப் பெண்களை வைத்தே நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்களிடம் ஆசை வார்த்தை கூறி பேசியுள்ளார். 320 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு வருடம் இலவசமாக பேசிக் கொள்ளலாம் என்று அந்தப் பெண்கள் மூலம் பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூற வைத்தியிருக்கிறார் அந்தோணி செல்வராஜ். மேலும் தங்களிடம் வாங்கும் பலசரக்கு பொருட்கள் பருப்பு, அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களுக்கு 75 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என ஆசை வார்த்தை கூறி அவர்களை உறுப்பினராக சேர்வதற்கு அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் உறுப்பினராக சேர்வதற்கு 590 ரூபாய் கட்டணம். ஏஜென்சி எடுக்க 5,000 முதல் 25,000 வரை செலுத்த வேண்டும் என தெரிவித்து உள்ளனர்.  ஏராளமானவர்கள் 320 ரூபாய் பணம் கொடுத்து முதல் ரீசார்ஜ் செய்து உள்ளனர்.

ஆனால் ரீசார்ஜ் செய்தவர்களுக்கு ஒரு மாதத்தில் காலாவதியாகி விட்டதால் இது குறித்து இமாலயா நிறுவனத்திடம் கேட்டதற்கு அவர்கள் முறையாக பதில் தெரிவிக்கவில்லை. மேலும் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கு முறையாக சம்பளம் வழங்கவில்லை. பணம் கட்டியவர்கள் செல்போனில் பேசி அழைத்த பெண்களிடம் வாக்குவாதம் செய்ய அந்த நேரத்தில் அலுவலகத்தில் மறைந்து இருந்த அந்தோணி செல்வராஜை பிடித்து கடுமையாக பேசினர். பின்னர் தூத்துக்குடி தென்பாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததை தொடர்ந்து போலீசார் அந்தோணி செல்வராஜை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தில் உள்ள ஏராளமானவர்களிடம் நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தகவல்கள்: பிரபாகரன், செய்தியாளர்.

POST COMMENTS VIEW COMMENTS