பாலியல் வன்கொடுமையை மாடியிலிருந்து பார்த்த பெண்கள் ! விரைந்து வந்து மீட்ட போலீஸ்


சென்னை கிழக்கு கடற்கரை சாலை அருகே உள்ள கானத்தூரில் முட்புதரில் வைத்து 8-ஆம் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூரை சேர்ந்த மாணவி சுதா( பெயர் மாற்றப்பட்டுள்ளது). அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவியை தவறான நோக்கத்துடன் அழைத்துச் சென்ற இளைஞர் ஒருவர் அங்குள்ள முட்புதர் ஒன்றில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். மாணவிக்கு இளைஞர் பாலியல் வன்கொடுமை கொடுப்பதை அருகில் உள்ள மாடியில் இருந்து இரண்டு பெண்கள் பார்த்துள்ளனர். மாணவிக்கு நடக்கும் கொடூரம் குறித்து உடனடியாக அப்பகுதி போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று 8-ம் வகுப்பு மாணவியை மீட்டனர். பின்னர் அந்த இளைஞரையும் கைது செய்தனர். அவர் பெயர் ரகமதுல்லா என்பதும் வயது 35 என்பதும் தெரியவந்துள்ளது.

இதனிடையே மீட்கப்பட்ட மாணவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்களை மாணவி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மாணவிக்கு அதே பகுதியில் சக வகுப்பு தோழி ஒருவர் இருந்துள்ளார். இதனால் சுதா அடிக்கடி தனது தோழி வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அப்போது சுதா தோழியின் அப்பாவான மன்சூர் அகமது, சுதாவிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார். சுமார் மூன்று மாதத்திற்கு முன் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. இருப்பினும் அது குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை. இந்நிலையில் சுதா சொன்ன தகவலை வைத்து மன்சூர் அகமதுவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து ரகமதுல்லா மற்றும் மன்சூர் அகமது ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். சம்பவம் தொடர்பாக கானத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தகவல்கள்: சாந்தகுமார், செய்தியாளர்.

POST COMMENTS VIEW COMMENTS