கால் டாக்சி டிரைவரை தாக்கி கார் கடத்தல்.. சினிமா பாணியில் செயல்பட்ட போலீசார்..!


மாங்காடு அருகே கால் டாக்சி டிரைவரை தாக்கி கார் கடத்தப்பட்டது. பின்னர் சினிமா பட பாணியில் கார் கடத்தல்காரர்களை விரட்டிச் சென்ற போலீசார் இரண்டரை மணி நேரத்தில் காரை மீட்டனர். சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். கால் டாக்சி டிரைவராக வேலை செய்து வருகிறார். இன்று அதிகாலை செல்வத்தின் காரை ஒரு நபர் புக் செய்துள்ளார். அதனைத்தொடர்ந்து வாடிக்கையாளரை அழைத்து செல்ல காரை மாங்காடு அடுத்த பரணிபுத்தூருக்கு எடுத்துச் சென்றுள்ளார் செல்வம். நீண்ட நேரம் ஆகியும் வாடிக்கையாளர் வராததால் அதனை கேன்சல் செய்து விட்டு மதுரவாயல்-தாம்பரம் செல்லும் பைபாசின் சர்வீஸ் சாலையில் காரை நிறுத்தி விட்டு வெளியே நின்று கொண்டிருந்தார் செல்வம்.

அப்போது அங்கு வந்த மூன்று பேர் கத்தியைக் காட்டி மிரட்டி செல்வத்தை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் செல்வத்தின் காரையும் அவர்கள் எடுத்து சென்று விட்டனர். இதில் காயம் அடைந்த செல்வம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். இதையடுத்து மாங்காடு, குன்றத்தூர் போலீசார் தனிப்படைகள் அமைத்து கார் கடத்தல்காரர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் காரில் இருந்த டவர் லொகேசனை வைத்து கார் வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கத்தில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த காரின் அருகே சென்றபோது அந்த மர்ம நபர்கள் காரை வேகமாக எடுத்து சென்றனர். உடனே போலீசார் அந்த காரை விரட்டி சென்றனர். இதையடுத்து காரை ஓரமாக நிறுத்து விட்டு மர்ம நபர்கள் தப்பி செல்ல முயன்றனர். இதில் மாங்காட்டை சேர்ந்த அப்துல் அமீது(21), என்பவரை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே திருட்டு வழக்கு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரை போலீசார் மீட்டனர். மேலும் தப்பியோடிய இரண்டு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தகவல்கள்: செய்தியாளர் நவீன்.

POST COMMENTS VIEW COMMENTS