திருச்சி நகை வியாபாரி மரணத்தில் திடீர் திருப்பம்: காட்டிக் கொடுத்த சிசிடிவி கேமரா


திருச்சி நகை வியாபாரி சென்னையில் மரணமடைந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. வழிப்பறி கொள்ளையனை பிடிக்கச் சென்றபோது விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தும் தெரியவந்துள்ளது.

திருச்சியைச் சேர்ந்த நகை வியாபாரி ரங்கராஜன். வாரத்திற்கு இருமுறை சென்னை சவுகார்பேட்டையில் வாடிக்கையாளர்களிடம் தங்கம் வாங்கிச் சென்று நகையாக மாற்றித் திருப்பி அளித்து வரும் தொழில் செய்து வந்தார். அதேபோல் கடந்த 25-ஆம் தேதி சென்னை வந்த அவர், வேப்பேரியில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது வேகத்தடையில் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிழந்தார். இதுகுறித்து அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

ஆனால், அவரிடம் இருந்த அரைக் கிலோ தங்கத்தை வழிப்பறி செய்தவர்களை துரத்திச் செல்லும்போது சாலையில் தடுமாறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என குடும்பத்தினர் சந்தேகித்தனர். அதுதொடர்பாக போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து இதுசம்பந்தமாக வேப்பேரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதன்படி தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்தும் அவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது சம்பவத்தன்று ரங்கராஜன் செல்லும் இருசக்கர வாகனத்தை பின்தொடர்ந்து ஒரு கும்பல் செல்வதும், அவர்கள் ரங்கராஜனை வழிமறித்து வழிப்பறியில் ஈடுபடுவதும் தெரியவந்தது. கொள்ளை கும்பலை பிடிப்பதற்காக ரங்கராஜன், இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்க முயன்றபோதுதான் வேகத்தடையில் நிலைதடுமாறி விழுந்து உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக முகமது சித்திக், ராஜ்குமார், மகேந்திர குமார், ஆனந்த் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்ற 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள மகேந்திர குமார், ரங்கராஜன் வழக்கமாக நகைகள் வாங்கிச் செல்லும் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்தான் இந்த கொள்ளை சம்பவத்திற்கு முழுக் காரணமாக இருந்து செயல்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள 4 பேர் மீதும் ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS