தொடரும் வங்கிக்கொள்ளை: யார் காரணம் ? ஊழியர்களா , கொள்ளையர்களா ?


திருவள்ளூரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் 6 கோடி‌ ரூபாய் மதிப்பிலான தங்‌க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.‌

ஆயில் மில் பகுதியில் 2 தளங்களைக் கொண்ட கட்டடத்தின் முதல் மாடியில் பேங்க்‌ ஆஃப் இந்தியா வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது. 2 நாட்கள் விடுமுறைக்குப் பின், மேலா‌ளர் மோகன் வங்கிக்கு வந்துள்ளார். வங்கியின் கதவில் இருந்த பூட்டு திறக்கப்பட்டிருப்பதைக் ‌கண்டு அதிர்ச்சியடைந்த அவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து‌ அங்கு‌ சென்ற காவலர்கள், வங்கியின்‌ உள்ளே சென்று பார்த்தபோது‌, பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த 6 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை திருடிப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. வங்கியின் பூட்டும், பாதுகாப்பு பெட்டகமும், கள்ளச்சாவி பயன்படுத்தி திறக்கப்பட்டிருந்த நிலையில்‌, வங்கி ஊழியர்கள் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்கு பதிந்துள்ள காவல்துறையினர், வங்கி ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.‌ சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய வங்கி கொள்ளை சம்பவங்கள்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த அசேஷம் பகுதியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 7-ந் தேதி மதியம் காரில் வந்த மர்ம நபர்கள் 5 பேர், துப்பாக்கி முனையில் ஊழியர்களை மிரட்டி பணம், நகைகளை கொள்ளையடித்து கொண்டு தலைமறைவாகி விட்டனர். இதுதொடர்பாக போலீசார் 4 பேரை இதுவரை கைது செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் சென்னை அடையாறு இந்திராநகரில் பட்டப்பகலில் இந்தியன் வங்கி கிளையில் துப்பாக்கி முனையில் ரூ.6 லட்சத்து 36 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. ஆனால் இந்த கொள்ளையனை போக்குவரத்து போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். ஜெயச்சந்திரன் என்ற மாணவரும் கொள்ளையனை பிடிக்க உதவியாக இருந்தார்.

இதேபோல் மதுரை விளக்குத்தூண் இந்தியன் வங்கி கிளையில் காசாளர் அறையில் இருந்த ரூ.10 லட்சம் கொள்ளை போனது. ஊழியர் ஒருவரின் பணி ஓய்வு பாராட்டு விழாவின் போது, ஆள் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர் பணத்தை திருடி சென்றுள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS