பணம் கொடுக்கலனா கொலைப் பண்ணிடுவேன் மிரட்டல் மன்னர்கள் கைது


பல் மருத்துவரை பணம் கேட்டு மிரட்டி‌ய கல்லூரி மாணவர் உள்பட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை கிழக்கு கடற்கரைசாலை கானாத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஹரிஷ் மற்றும் வைசாலி தம்பதியினர். இவர்கள் இருவரும் சோழிங்கநல்லூரில் பல் மருத்துவமனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் பல் மருத்துவர் ஹரிசை தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர், 1 லட்ச ரூபாய் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதற்கு மருத்துவர் தன்னிடம் 10,000 ரூபாய் தான் இருப்பதாக கூறியுள்ளார் .இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் உனது வீட்டில் உள்ளவர்களை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். உனது மனைவி நகைகளை அடகு வைத்து 50,000 ரூபாய் கொடு என மர்ம நபர் கூற மருத்துவரும் இதற்கு ஒப்புக்கொள்கிறார்.மேலும் இதுகுறித்து போலீசிடம் கூறினால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என அந்த நபர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஹரிஷ் கானாத்தூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்த விவரங்களை சேகரித்தனர்.  ஹரிஷின் செல்போனுக்கு வந்த அழைப்பு எந்த எண்ணில் இருந்து வந்தது. அந்த சிக்னலை வைத்து காவல்துறையினர் அவர்களின் செயல்பாடுகளை கண்காணித்து வந்தனர். விசாரணையில், மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது, குரோம்பேட்டையைச் சேர்ந்த தனியார் சட்டக்கல்லூரி மாணவர் முருகனும், அவரது நண்பர் பாலாஜி என்பதும் தெரியவந்தது.

தொழிலதிபர்களை குறி வைத்து பணம் கேட்டு மிரட்டும் இவர்கள், அவர்கள் பய உணர்வுடன் பேசும் ஆடியோவை மீண்டும் கேட்டு மகிழ்ச்சியடையும் பழக்கம் கொண்டவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுவரை 25க்கும் மேற்பட்ட தொழிலதிபர்களை பணம் கேட்டு மிரட்டியுள்ள இவர்களுக்கு, உளவியல் ரீதியான பிரச்னை ஏதேனும் இருக்குமா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS