தமிழில் பேசியதால் ஆராய்ச்சி மாணவரை தாக்கிய கன்டக்டர்: பெங்களூரில் அதிர்ச்சி!


தமிழில் பேசியதால் பஸ் கன்டக்டர் தன்னை தாக்கியதாக ஆராய்ச்சி மாணவர் ஒருவர் பெங்களூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

மதுரையை சேர்ந்தவர் கார்த்திக் (30). இவர் கடந்த 8 வருடங்களாக பெங்களூரில் வசித்து வருகிறார். அங்குள்ள இந்திய அறிவியல் கழகத்தில் பிஎச்டி படித்துவருகிறார். இவர் அறிவியல் கழகத்துக்கு செல்ல, ஐடிஐ லேஅவுட் பஸ் ஸ்டாப்பில் இருந்து சில நாட்களுக்கு முன் பஸ்சில் ஏறினார். கூட்டம் அதிகமாக இருந்தது. அவரால் உள்ளே செல்ல முடியவில்லை. படிக்கட்டில் நின்றார். கன்டக்டர் உள்ளே வருமாறு அழைத்தார். அப்போது, அடுத்த ஸ்டாப்பில் இறங்க போகிறேன் என்று கார்த்திக் தமிழில் சொன்னார். கடுப்பான அந்த கண்டக்டர், ’தமிழனா நீ’ என்று கடுமையாகத் திட்டத் தொடங்கினார். பின்னர் அவர் தலையில் தாக்கினார். கார்த்திக்குக்கு ஆதரவாக அங்கிருந்தவர்கள் யாரும் பேசவில்லை. தொடர்ந்து அவரை மிதித்து பஸ்சை விட்டு இறக்கி விட்டுள்ளார். 

இதையடுத்து தமிழில் பேசியதால் தன்னை கேவலமாகப் பேசி தாக்கியதாக அந்த கன்டக்டர் மீது சதாசிவம்நகர் போலீசில் புகார் செய்தார்.

இதுபற்றி கார்த்திக் கூறும்போது, ‘தமிழில் பேசியதால் ஆத்திரத்தில் திட்டி, கேவலமாகப் பேசினார் அந்த நடத்துனர். பிறகு என்னை பலமுறைத் தாக்கினார். யாரும் எனக்கு ஆதரவாகப் பேசவில்லை. பஸ்சில் இருந்து இறங்கச் சொன்னார். நான் மறுத்தேன். பிறகு டிரைவர் இறங்கி வந்து என்னிடம் மற்றப் பயணிகளுக்காக இறங்கிக் கொள்ளுங்கள் என்று வேண்டிக் கேட்டுக்கொண்டார். இதனால் இறங்கிவிட்டேன்’ என்றார்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

POST COMMENTS VIEW COMMENTS