பெண்களிடம் ரகளை செய்த இளைஞர்கள்: தட்டிக்கேட்ட முதியவர் அடித்துக் கொலை


கோவில் திருவிழாவில் ரகளை செய்தவர்களை தட்டிக் கேட்ட முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளது கோவிலூர் கிராமம். இங்குள்ள பட்டய அம்மன் கோவில் திருவிழா நேற்றிரவு நடைபெற்றது. இவ்விழாவிற்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் 5 பேர், பெண்களை கேலி செய்தும், பிறரிடம் வம்பு செய்தும் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சின்னையா (60) என்பவர் இதனை தட்டிக் கேட்டுள்ளார். மேலும், ரகளையில் ஈடுபட்டவர்களின் குடும்பத்தாரிடம் இது குறித்து சொல்ல போவதாக எச்சரித்துவிட்டு , இளைஞர்களின் வீட்டிற்கும் சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் 5 பேரும், சின்னையாவை வழிமறித்து கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் சின்னையா படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் சின்னையாவை மீட்டு ,காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிக்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சின்னையா அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி சின்னையா உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த குன்றக்குடி போலீசார், கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக, ராஜா ,பாண்டியராஜன் ராஜேஷ், பாலசுப்பிரமணியன், பழனிக்குமார் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS