கர்ப்பிணி ஆனால் கர்ப்பிணி இல்லை: வெளிச்சத்திற்கு வந்த குழந்தைக் கடத்தல்


டெல்லி மருத்துவமனைகளில் இருந்து குழந்தைகளை கடத்திவந்து விற்பனை செய்து வந்த 4 பேரை சென்னை காவல்துறை நூதன முறையில் பிடித்துள்ளது. இந்த 4 பேரையும் வரும் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை குழந்தைகள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த நான்கு பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகி உள்ளன.

ரிக்கி வர்மா அவரது மனைவி கோமல் வர்மா, அமித் ஷர்மா அவரது மனைவி ஜெயா ஷர்மா இந்த நான்கு பேர் பிடிபட்ட சம்பவத்தின் ஆரம்பம், 2016-ஆம் ஆண்டு சென்னையில் தொடங்குகிறது.‌ சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த பத்மினி என்ற இளம் பெண், கர்ப்பம் தரிக்காமலேயே கர்ப்பிணி போல நடித்து கணவரையும் புகுந்த வீட்டாரையும் ஏமாற்றிவிட்டதாக புகார் அளிக்கப்பட்டது. பத்மினியின் கணவர் யோகேஷ் குமார், மாமனாரான ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் சோமன் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் பத்மினி கர்ப்பிணி அல்ல என்றும், குழந்தையை விலைக்கு வாங்கியதும் தெரிய வந்தது. இது தொடர்பான புகாரில் வழக்குப்பதிவு செய்தும் எந்த முன்னேற்றமும் இல்லாத நி‌லையில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி குழந்தைகள் கடத்தல் தடுப்புப்பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டது. அப்போது பத்மினியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தரகர் மூலம் வடமாநிலத்தவரிடம் இரு‌ந்து குழந்தையை வாங்கியதை ஒப்புக்கொண்டார்.

பத்மினி மூலம் கிடைத்த செல்போன் எண்களைக் கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் இதன் பின்னணியில் பெரிய நெட்வொர்க்கே செயல்படுவது தெரியவந்தது. உத்தரப்பிரதேச மாநிலம் காசியபாத்தில் இருந்து பேசிய நபர்களிடம், தங்களுக்கு குழந்தை வேண்டும் என்றும், விலைக்கு வாங்கிக்கொள்வதாகவும் காவல்துறையினர் கூறி அவர்களை சென்னைக்கு வரவழைத்தனர்.

அப்போதுதான் ரிக்கி வர்மா, அமித் ஷர்மா மற்றும் இவர்களின் மனைவிகளை குழந்தைகள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் பிடித்துள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. இவர்கள் டெல்லி மருத்துவமனைகளில் முறைதவறி பிறக்கும் குழந்தைகளைக் கடத்திவந்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விற்பனை செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. இதுவரை 4  குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்துள்ளதாகவும், குறைந்தபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை குழந்தைகளை விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. ‌இதையடுத்து இவர்கள் 4பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.‌ 4 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS