12 வயது சிறுவனால் வந்த சண்டை : கொலையில் முடிந்த கதை!


சென்னையில் நடுரோட்டில் ஒருவரை வெட்டிக்கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை அமைந்தகரை பகுதியில் வசிப்பவர் கார்த்திக் (25). இவரது அக்கா லதாவிற்கு 7ஆம் வகுப்பு படிக்கும் மகன் (12) உள்ளார். அதேபகுதியை சேர்ந்தவர் திலீப் குமார் (34). ஒருநாள் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த கார்த்திக்கின் அக்கா மகனை, திலீப் குமார் தனது நண்பருடன் சேர்ந்து தாக்கியுள்ளார். அந்த சிறுவன் தனது மாமா-வாகிய கார்த்திக்-கிடம் சென்று கூறியுள்ளார். 

ஆத்திரத்துடன் சென்ற கார்த்திக், திலீப்புடன் வாதம் செய்துள்ளார். வாதம் மோதலாக மாற திலீப் மற்றும் அவரது நண்பருடன் கார்த்திக் சண்டை போட்டுள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட இருவரையும் காவலர்கள் கைது செய்தனர். ஏற்கனவே கார்த்திக் மீது பாலாஜி என்பவரை கொலை செய்ததாக வழக்கு இருந்துள்ளது. இதனால் காவல்துறையினர் அவரை கடுமையாக எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இதனால் ஆத்திரத்துடன் வெளியே வந்த கார்த்திக், திலீப் இருசக்கர வாகனத்தில் வரும் போது தனது நண்பர்களுடன் வழிமறித்து கத்தியால் தாக்கியுள்ளார். ரத்த வெள்ளத்தில் திலீப் ஓட்டம் பிடிக்க, விரட்டிச்சென்று அவரை கார்த்திக் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த திலீப், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ள கார்த்திக்கை தீவிரமாக தேடி வருகின்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS