மருத்துவமனையில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது


மருத்துவமனைக்குள் சிகிச்சை பெற வந்த இளம் பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஐதராபாத்தில் உள்ள பஞ்சராஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் சோனியா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 35. இவர் கணவர் இவரைக் கடுமையாகத் தாக்கி காயப்படுத்தினாராம். இதனால் பஞ்சரா ஹில்ஸ் போலீஸில் கணவர் மீது புதன்கிழமை இரவு புகார் கொடுத்தார். போலீசார், அரசு மருத்துவமனையில் இருந்து மருத்துவச் சான்றிதழ் வாங்கி வருமாறு கூறியுள்ளனர். 

இதையடுத்து இரவில் மருத்துவமனைக்குச் சென்ற சோனியா, அங்கு விவரத்தைக் கூறினார். டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தனர். பின்னர் சோனியா வரண்டாவில் உட்கார்ந்திருந்தார். அப்போது அங்கு, முன் பின் தெரியாத ஒருவர் சோனியாவிடம் பேச்சுக்கொடுத்துள் ளார். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

அந்த பக்கமாக வந்த வார்டு பாய், நாகராஜ் (35) சத்தம் கேட்டு சோனியாவிடம் விசாரித்தார். பின்னர், தான் இந்த மருத்துவமனையின் உயரதிகாரி என்றும் ’வெளிப்புற நோயாளிகளுக்கான வார்டு மேலே இருக்கிறது, என்னோட வாங்க’ என்றும் அழைத்திருக்கிறார். உடன் சென்றார் சோனியா. முதல் மாடி சென்றதும் அங்கு இருட்டாக இருந்த ஓர் இடத்துக்குள் அழைத்துச் சென்று, மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சத்தம் கொடுத்தால் கொன்று விடுவேன் என்றும் கூறியுள்ளார். காரியம் முடிந்ததும் அங்கே பணியில் இருந்த ஹோம்கார்டுவிடம் நடந்த விஷயத்தைக் கூறியிருக்கிறார் நாகராஜ். அவர், ‘நான் இந்த விஷயத்தை யாரிடம் சொல்ல மாட்டேன். கண்டுகொள்ளாமல் போ’ என்று தைரியம் கொடுத்திருக்கிறார்.

பாதிக்கப்பட்ட சோனியா, அப்சல்கஞ்ச் போலீசில் இதுபற்றி புகார் கொடுத்தார். போலீசாரிடம் தன்னை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறியிருந்தார். அதோடு அவன் காதில் கடுக்கண் அணிந்திருந்தான் என்றும் கூறியிருந்தார். இதையடுத்து போலீசார் மருத்துவமனையில் பணிபுரிந்தவர்களின் புகைப்படங்களை காட்டினர். அதில் நாகராஜை அடையாளம் காட்டினார் சோனியா.

இதையடுத்து நாகராஜூம், குற்றத்தை மறைத்ததற்காக ஹோம்கார்டு, கமர் இலாஹியும் கைது செய்யப்பட்டனர். 

POST COMMENTS VIEW COMMENTS