இரக்கமின்றி பெண்ணை தாக்கும் சங்கிலித் திருடன்கள்!


பெங்களூருவில் சங்கிலித் திருடன்கள் இருவர் பெண் ஒருவரை இரக்கமின்றி தாக்கும் வீடியோ காட்சிகள் பரவி வருகிறது.

பெங்களூரு ஆர்.ஆர்.நகரில் வீட்டின் வெளியே இரு பெண்கள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு சங்கிலித் திருடன்கள், ஒரு பெண்ணின் கழுத்திலிருந்து சங்கிலியைப் பறிக்க முயன்றனர். அந்தப் பெண் அவர்கள் கையை தட்டிவிட, சங்கிலியைப் பறிக்க முடியவில்லை. அப்போது நகர்ந்து கொண்டிருந்த வண்டியில், பின்புறம் உட்கார்ந்திருந்த திருடனின் முதுகில் அப்பெண் அடித்தார். அத்துடன் சத்தம் போட்டு திருடன்களை திட்டினார்.

இதையடுத்து நடுரோட்டில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, அப்பெண்ணை தாக்க திருடன்கள் இறங்கி வந்தனர். இதைக்கண்டதும் அப்பெண்ணுடன் நின்றுகொண்டிருந்த மற்றொரு பெண் வீட்டிற்குள் ஓடிவிட்டார். இறங்கி வந்த திருடன்கள் அவர்களை திட்டியப் பெண்ணை  இரக்கமின்றி தாக்கத்தொடங்கினர். அவர்களின் தாக்குதலை அந்தப் பெண் எதிர்கொள்ள முயன்றார். அப்போது தகாத முறையிலும் அந்தப் பெண்ணிடம் நடந்துகொள்ள திருடன்கள் முயன்றனர். பின்னர் அந்தப் பெண்ணை அடித்து, தாக்கிவிட்டு திருடன்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரவி வருகிறது. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

POST COMMENTS VIEW COMMENTS