சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 70 வயது முதியவர் கைது


சேலத்தில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 70 வயது முதியவரை காவல்துறையினர் கைது செய்தனர். 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பெரியேறிபட்டியில் வசிக்கும் 70 வயது முதியவர் குழந்தை (பெயர்). தனியாக வசித்து வரும் இந்த முதியவர், அப்பகுதியில் உள்ள 3 வயது பெண் குழந்தைக்கு தினமும் தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து, கொஞ்சி விளையாடி வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை பெண் குழந்தையின் பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட்டனர். இதனால் குழந்தையும், குழந்தையின், அண்ணனும் விளையாடி கொண்டு இருந்தனர். அப்போது அவர்களை அழைத்த முதியவர், சிறுவனுக்கு மிட்டாய் கொடுத்து வாசலில் அமர்த்திவிட்டு, பெண் குழந்தையை வீட்டிற்குள் அழைத்து சென்றுள்ளார். 

பின்னர் 3 வயது குழந்தை என்றும் பாராமல், அந்தக் கொடூர முதியவர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். குழந்தை கதறி அழுதுள்ளது. தங்கை அழுவதால் வெளியே இருந்த சிறுவன் அக்கம்பக்கம் உள்ளவர்களை அழைத்து வந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து முதியவரிடம் இருந்து 3 வயது குழந்தையை மீட்டுள்ளனர். பின்னர் அந்த முதியவரை பிடித்து ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு, நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளனர். அதன்படி முதியவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து, கைது செய்தனர். இதைத்தொடர்ந்து ஓமலூர் நீதிமன்றத்தில் முதியவரை ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். தற்போது பாதிக்கப்பட்ட குழந்தை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. 

POST COMMENTS VIEW COMMENTS