சினிமா பட பாணியில் காதலியின் பாய் ஃபிரெண்ட்டை கொன்றக் கொடூரன்


தனக்கு பிடித்த பெண்ணுடன் பழகுவதற்காக அப்பெண்ணின் ஆண் நண்பரைக் கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கெவின் பிரசாத் என்பவர் கலிபோர்னியாவில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னுடன் பணிபுரியும் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அப்பெண்ணிடம் காதலை மறைத்து, நட்பாக பழகி வந்துள்ளார். அந்தப் பெண்ணும் இவருடன் சக ஊழியர் என்ற முறையில் நட்புடன் பழகியுள்ளார். அந்தப் பெண்ணுடன் வெளியே செல்ல நினைத்த கெவின், பல முறை வெளியே செல்ல அழைத்துள்ளார். ஆனால் தொடர்ந்து அப்பெண் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். என்ன காரணம்? என கெவின் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கோபமடைந்த அப்பெண், ‘எனக்கு 3 வயது குழந்தை இருக்கிறது. நான் மார்க் என்ற எனது நண்பருடன் நீண்ட வருடங்களாக ஒன்றாக வசித்து வருகிறேன்’என்று கூறியுள்ளார்.

அந்தப் பெண்ணுக்கு வேறொரு துணை இருக்கிறார் என்று தெரிந்தும், கெவின் தனது காதலை தொடர்ந்து வந்துள்ளார். அவரால் அப்பெண்ணை மறக்க முடியவில்லை. ஆனால் ஒருமுறை கூட அந்தப் பெண்ணிடம் அவர் தகாத முறையில் நடந்துகொண்டதில்லை. இறுதி வரை நட்புடனே பழகி வந்துள்ளார். ஒருநாள் தனது பணியிலிருந்து விடை பெறுவதாக அப்பெண் கூறியுள்ளார். ஏன்? என கெவின் கேட்க, தான் லாஸ் விகாஸ் நகரத்தில் தனது ஆண் நண்பர் மற்றும் குழந்தையுடன் குடியேறப்போவதாக தெரிவித்துள்ளார். தனது கடைசி நாள் பணியின் போது, மார்க்கை அழைத்து வந்து கெவினுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

பின்னர் இது தான் கடைசி சந்திப்பு என விடைபெற்றுள்ளார் அப்பெண். இதைத் தாங்கிக்கொள்ள முடியாத கெவின் தனது நண்பர் ரிவெரா (25) என்ற இளைஞரை அழைத்துக்கொண்டு, மார்க் சென்ற காரை பின்தொடர்ந்துள்ளார். காரில் அப்பெண்ணும் சென்றுகொண்டிருந்தார். சுமார் 20 கி.மீ வரை காரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். ஒரு இடத்தில் கார் நிற்க, உடனே அதன் மீது தாவிக்குதித்த கெவின், ஓட்டுநர் இடத்தில் இருந்த மார்க் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். கெவின் உடையை மாற்றிக்கொண்டு, முகத்தை மறைத்துக்கொண்டு இருந்ததால் அப்பெண்ணால் கண்டுபிடிக்க முடியவில்லை. கெவின் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பெண்ணும் சற்று காயமடைந்துள்ளார். 

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க, அப்பெண் கெவின் மீது சந்தேகம் உள்ளது எனக்கூறியுள்ளார். அதன் அடிப்படையில் காவலர்கள் கெவினை பிடித்து விசாரிக்க உண்மை வெளிவந்தது. இதையடுத்து கெவின் மற்றும் அவரது நண்பர் ரிவெரா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

POST COMMENTS VIEW COMMENTS