டிரங் பெட்டிக்குள் 15 புடவை, நகைகளுடன் இளம் பெண் பிணம்!


இளம் பெண்ணைக் கொன்று டிரங் பெட்டிக்குள் அடைத்து வைத்து வீசிச்சென்றுள்ள சம்பவம் மும்பை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை அருகேயுள்ளது, வாஷி. இங்குள்ள கோவன் பகுதியில், ஓடை ஒன்றின் அருகே டிரங்க் பெட்டி ஒன்று கிடப்பதை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள், நேற்றுப் பார்த்துள்ளனர். அதில் இருந்து துர்நாற்றம் வருவதை அறிந்த அவர்கள், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார், அந்த டிரங்கு பெட்டியை திறந்து பார்த்தனர். உள்ளே, ஒரு பெண்ணின் உடல் அமுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அதை உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அந்தப் பெட்டியில் 15-க்கும் அதிகமான புடவைகளும் இருந்துள்ளன. அந்தப் பெண் வளையல், நெக்லஸ் உள்ளிட்ட நகைகளையும் அணிந்துள்ளார். அவர், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அந்தப் பெண் கழுத்தை நெறித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. 
 

POST COMMENTS VIEW COMMENTS