பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தவரின் பிறப்புறுப்பை வெட்டிய பெண்


உத்தரப்பிரதேசத்தில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய வந்த நபரின் பிறப்புறுப்பை பெண் ஒருவர் கத்தியால் வெட்டிய சம்பவம்  நடைப்பெற்றுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்து குழந்தைகள் மட்டும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பாலியல் வன்கொடுமை செய்ய வந்த நபரின் பிறப்புறுப்பை பெண் ஒருவர் கத்தியால் வெட்டிய சம்பவம் நடைப்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணே காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி விகாஸ் திவாகர் கூறுகையில், அந்த பெண் நள்ளிரவில் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அவர் தனியாக இருப்பதை அறிந்த அவரது உறவினர் ஒருவர், வீட்டிற்குள் நுழைந்து, பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். அந்தப்பெண் தன்னை பாதுகாத்துக்கொள்ள தனியாகப் போராடினார். தனது வீட்டு சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து அந்த நபரை சரமாரியாகத் தாக்கியுள்ளார். பெண்ணின் தாக்குதலில் நிலைக்குலைந்த அந்த நபர் அங்கிருந்து தப்பிச்செல்ல முயற்சித்துள்ளார். ஆனால் அந்த பெண் அவரை விடாமல் பிடித்து இழுத்து மின் கம்பத்தில் கட்டி வைத்தார். பின்னர் அவரது பிறப்புறுப்பில் கத்தியால் சரமாரியாக வெட்டினார். இதை எதிர்பார்க்காத அவர் வலியால் கதறி துடித்தார். 

அதன் பின்னர் அந்தப்பெண்ணே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின் பேரில் அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS