மாணவியுடன் காதல் ! பள்ளி ஆசிரியர் படுகொலை


வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பேரூராட்சி தாயப்பர் தெருவை சேர்ந்தவர் சதீஷ் வயது 33. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன .இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். அதே பள்ளியில் அவரிடம் பயின்ற மாணவி ஒருவருடன் காதலிப்பதாக கூறி பழகியதாக கூறப்படுகிறது. இப்போது அந்தப் பெண் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். ஆனால் சென்னையில் படித்து வரும் மாணவியிடம் சதீஷ் தொடர்ந்து பழகி வந்ததாக கூறப்படுகிறது. 

இதனை அறிந்த மாணவியின் பெற்றோர், சதீஷை கண்டித்ததுடன் அவர் பணிபுரியும் பள்ளியிலும் முறையிட்டதால் பள்ளி நிர்வாகம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அவரை பணியிலிருந்து நீக்கியதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் கடந்த ஞாயிறு ஊர் திருவிழாவை முன்னிட்டு சதீஷ் ஏரிக்கோடி என்ற ஊருக்கு வந்துள்ளார். அங்கு நண்பர்களுடன் இசை நிகழ்ச்சியை கண்டுகளித்துள்ளார். பின்பு, இரவு 11 மணியளவில், ஏரிக்கரை சேவைச் சாலையில் தனியாக சென்றுகொண்டிருந்தபோது, பின் தொடர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள்  அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. பின்பு தங்களிடமிருந்த கத்தியால் சரமாரியாக சதீஷை குத்தியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே சதீஷ் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவரின் உடலை கைப்பற்றிய போலீஸார் திருப்பத்தூர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் சதீஷை கொலை செய்த அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.
 

POST COMMENTS VIEW COMMENTS