கணவர் மீது ஆசிட் ஊற்றிவிட்டு நாடகமாடிய மனைவி - சிக்கியது எப்படி?


கணவர் மீது ஆசிட் ஊற்றிவிட்டு யாரோ ஊற்றியது போல் நாடகமாடிய மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.

கேரள மாநிலம் மாலப்புரம் மாவட்டத்தில் வசித்து வரும் தம்பதியினர் பஷீர் (52) மற்றும் சுபைதா. இவர்களது மகன் தமிழ்நாட்டில்
உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். வியாபாரியான பஷீருக்கு வேறொரு பெண்ணுடன் தகாத உறவு இருந்துள்ளது. இதனால்
சுபைதா மனதிற்குள் நீண்ட நாட்கள் கோபம் இருந்துள்ளது. கடந்த மார்ச் 20ஆம் தேதி தங்கள் மகன் வருவதாக இருந்ததால், வீட்டின்
கேட்டை மூடாமல் இருவரும் தூங்கியுள்ளனர். இரவு 11 மணிக்கு மேல் பஷீர் நன்றாக தூங்கியதும், சபைதா தான் மறைத்து
வைத்திருந்த ஆசிட்டை அவர் முகத்தில் ஊற்றியுள்ளார். வலி தாங்க முடியாமல் பஷீர் அலறி எழ, மீண்டும் அவர் உடலில் சபைதா
ஆசிட்டை ஊற்றியுள்ளார். இதில் பஷீர் படுகாயமடைந்தார். அவரால் எதையும் கவனிக்க முடியவில்லை. தனக்கு என்ன நடந்தது
என்பதையும் யூகிக்க முடியவில்லை. முகம், உடல் முழுவதும் எரிச்சலுடனான வலியை மட்டுமே அவரால் உணர முடிந்தது. 

இதையடுத்து தனது மனைவியை உதவிக்கு அழைக்க, சபைதாவும் எதுவும் தெரியாதது போல் பேசியுள்ளார். மருத்துவமனைக்கு
அழைத்துச்செல்லுமாறு சபைதாவிடம் பஷீர் கதறியுள்ளார். மருத்துவமனைக்கு போன் செய்துள்ளதாகவும், ஆம்புலன்ஸ் வருவதாகவும்
சபைதா கூறியுள்ளார். 2 மணியளவில் வலி தாங்க முடியாமல் பஷீரே காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு செல்ல
முயன்றுள்ளார். ஆனால் அவர் முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டுள்ளதால், அவரால் பார்க்க முடியவில்லை. இதையடுத்து சபைதா அவரை
மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளார். மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, யாரோ அடையாளம் தெரியாத நபர் ஆசிட்டை
ஊற்றிவிட்டு ஓடியதாக பஷீரிடம் கூறியுள்ளார். அவரும் நம்பியுள்ளார்.

இதையடுத்து மருத்துவமனை மூலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பஷீர் மற்றும்
சபைதாவை காவலர்கள் விசாரிக்க, இருவருமே அடையாளம் தெரியாத நபர் ஆசிட்டை ஊற்றிவிட்டு தப்பி ஓடியதாக
தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தியதில் ஒரு தடயத்தைக் கூட காவலர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால் குற்றவாளியை பிடிக்க முடியாமல் காவலர்கள் திணறியுள்ளனர். மீண்டும் இருவரிடமும் காவலர்கள் விசாரணை நடத்த,
இருவரின் பதில்களும் ஒத்துப்போகவில்லை. இதனால் சபைதா மீது காவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த கோணத்தில்
விசாரணையை தொடங்க, உண்மைகள் வெளிவந்தது. 

காவலர்களின் விசாரணைப் படி, சம்பவம் நடந்த அன்று சபைதாவுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. பஷீர் மீது மட்டும் ஆசிட்
ஊற்றப்பட்டிருந்தால் கூட, அவர் அலறியவுடன் சபைதா அவரை தூக்கியிருந்தால் அவரது உள்ளங்கைகளில் காயம் ஏற்பட்டிருக்கும்.
ஆனால் அப்படி எதுவும் இல்லை. அடையாளம் தெரியாத நபர் வீட்டிற்குள் புகுந்திருந்தால், சபைதா சில நாட்களுக்கு பதட்டத்துடன்
காணப்பட்டிருப்பார். ஆனால் அவர் பதட்டத்தை ஒரு நிமிடம் கூட உணர்ந்தவராய் இல்லை. வேறொரு நபர் வீட்டிற்குள் புகுந்திருந்தால்,
சபைதா சத்தம் போட அக்கம் பக்கத்தினர் வந்திருப்பார்கள், ஆனால் அக்கம் பக்கத்தினருக்கு சம்பவம் நடந்ததே தெரியவில்லை. சம்பவம்
நடந்தது 11 மணியளவில், ஆனால் பஷீர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது 2 மணியளவில். அந்த நேரத்தில் ஆம்புலன்ஸ்
வரவில்லை என சபைதா கூறியிருக்கிறார். ஆனால் 11 - 2 மணிகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் சபைதாவின் போனிலிருந்து
மருத்துவமனைக்கு எந்த போனும் போகவில்லை. அவரது மகன் மற்றும் மருமகனுக்கு மட்டும் ஒரு முறை போன் செய்யப்பட்டுள்ளது. 

பஷீர் சேர்க்கப்பட்ட மருத்துவமனைக்கு செல்லும் பாலம் ஒன்றிற்கு அருகே ஆசிட் பாட்டில் கிடைத்துள்ளது. அந்த ஆசிட்டை
மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சபைதா வீசியிருக்கலாம் என காவலர்கள் சந்தேகித்துள்ளனர். அத்துடன் மலைப்பகுதிகளில்
உள்ள உரக்கடைகளில் விசாரித்து போது, சபைதாவின் உருவ அடையாளங்களை ஒரு கடைக்காரர் உறுதி செய்துள்ளார். இந்த
ஆதாரங்கள் அனைத்தையும் வைத்து சபைதாவிடம் விசாரிக்க, அவர் சமாளிக்க முடியாமல் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து
இன்று சபைதாவை காவலர்கள் கைது செய்தனர். அவர் மீது ஆசிட் வீச்சு மற்றும் கொலை முயற்சி ஆகிய குற்றங்களின் கீழ்
வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே சிகிச்சை பலனின்றி பஷீர் உயிரிழந்துவிட்டார்.

POST COMMENTS VIEW COMMENTS