பள்ளி குழந்தைகளின் ஆபாச படங்களை பொதுவெளியில் விட்ட இருவர் கைது


நெல்லை மாவட்டம் பணகுடியில் பள்ளி குழந்தைகளை செல்போனில் ஆபாசமாக படம் எடுத்த வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை மாவட்டம் ரோஸ்மியாபுரம்‌ அரசு பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்த அந்தோணிசாமி பள்ளிக் குழந்தைகளை செல்போனில் ஆபாசமாக படம் எடுத்ததாக வந்த புகாரின் அடிப்படையில் அவரை கடந்த 9-ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர். மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பேரில் அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அந்தோணிசாமியை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர், தனது செல்போனை சர்வீஸ் செய்வதற்காக மொபைல் கடையில் கொடுத்ததாகவும், அந்த கடையின் உரிமையாளர் எழிலரசன் போனில் இருந்து ஆபாச படங்களை எடுத்துக்கொண்டு அவரது நண்பர் செல்வபிரகாஷ் உடன் சேர்ந்து பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறியுள்ளார். மேலும், இருவரும் சேர்ந்து அந்தோணிசாமியிடம் பல வருடங்களாக பணம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர். அந்தோணிசாமி தரமுடியாது எனக் கூறியதை அடுத்து வீடியோவை பொதுமக்களிடம் கொடுத்துள்ளனர். இதனையடுத்து பணகுடி காவல்துறையினர் எழிலரசன் மற்றும் செல்வபிரகாஷ் இருவரையும் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு‌ செய்து சிறையில் அடைத்தனர்.

POST COMMENTS VIEW COMMENTS