சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றேன்.. மனம் திறந்த நடிகை ரேவதி..!


5 ஆண்டுகளுக்கு முன்பே சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றதாகவும், தற்போது தன் குழந்தையே தன் உலகம் எனவும் நடிகர் ரேவதி மனம் திறந்து பேசியுள்ளார்.

பாரதிராஜா இயக்கிய ‘மண்வாசனை’ மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை ரேவதி. தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் நடித்து தனக்கென்று தனி இடம் பிடித்தார். இதுதவிர மலையாளம், ஹிந்தி, தெலுங்கு உள்பட பல மொழிகளில் ஏராளமான படங்கள் நடித்து பல விருதுகளையும் வென்றுள்ளார். சில படங்களை இயக்கவும் செய்துள்ளார். கடந்த 1986-ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான சுரேஷ் மேனனை திருமணம் செய்த அவர் கருத்து வேறுபாடு காரணமாக 2002-ஆம் ஆண்டு பிரிந்தார். இவர்கள் இருவருக்கும் 2013-ஆம் ஆண்டு முறைப்படி விவாகரத்து கிடைத்தது.

இதனிடையே நடிகை ரேவதி தனிப்பட்ட முறையில் பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வருவதாக அடிக்கடி செய்திகள் பரவின. ஆனால் அப்போதெல்லாம் எதனையும் வெளிப்படையாக பேசாமல் ரேவதி மவுனம் காத்து வந்தார். இந்நிலையில் நடிகை ரேவதி, தான் தத்தெடுத்து குழந்தை வளர்க்கவில்லை என்றும் 5 ஆண்டுகளுக்கு முன்பே சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றதாகவும் மனம் திறந்து பேசியுள்ளார். 

இதுபற்றி அவர் கூறும்போது, “ வாழ்க்கையில் பல பிரச்னைகளை கடந்து வந்திருக்கிறேன். தாய்மை என்பதை ஒரு பெண்ணின் முழுமையாக கருதுகிறேன். அதற்காக ஏங்கவும் செய்திருக்கிறேன். எனவே சோதனை குழாய் மூலம் கர்ப்பம் அடைந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பெண் குழந்தை பெற்றேடுத்தேன். அவளுக்கு மகி என்று பெயர் சூட்டியிருக்கிறேன். அவளை தான் தத்தெடுத்து வளர்க்கவில்லை. அவ்வாறு பரவும் வதந்தியை தடுக்கவே தற்போது உண்மையை உலகிற்கு சொல்லியுள்ளேன். தற்போது மகி வளர்ந்து வருகிறாள். அவள் தான் என் உலகம். ஒரு அம்மாவாக அவளை வளர்த்து ஆளாக்கவது தான் என் பொறுப்பு” இவ்வாறு ரேவதி தெரிவித்தார்.

ரேவதிக்கு தற்போது 52 வயது ஆகிறது. எனவே அவர் தனது 47 வயதில் சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றது தற்போது தெரியவந்துள்ளது. 

POST COMMENTS VIEW COMMENTS