ப்ளீஸ்... சோனாலியின் கணவர் திடீர் கோரிக்கை!


தயவு செய்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று நடிகை சோனாலி பிந்த்ரேவின் கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழில், ’பம்பாய்’ படத்தில் ’ஹம்மா ஹம்மா’ பாடலுக்கு ஆடியவர் இந்தி நடிகை சோனாலி பிந்த்ரே. பின்னர், ’காதலர் தினம், ’கண்ணோடு காண்பதெல்லாம்’ படங்களில் ஹீரோயினாக நடித்தார்.  2002 ஆம் ஆண்டு தயாரிப்பாளரும் இயக்குநருமான கோல்டி பெல்லை திருமணம் செய்துகொண்ட இவர், பிறகு நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தார். அவ்வப்போது இந்தி தொலைக்காட்சிகளின் நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்தார். 43 வயதாகும் சோனாலி தற்போது புற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதற்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் அவர் உடல் நிலை குறித்து கடந்த சில நாட்களுக்கு முன் வதந்தி பரவியது. அவர் இறந்துவிட்டதாக நினைத்து, ’புகழ்பெற்ற நடிகை சோனாலி பிந்த்ரே அமெரிக்காவில் காலமானார். அவரது மரணத்திற்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கி றேன்’ என்று மகாராஷ்ட்ர மாநில பாஜக எம்.எல்.ஏ ராம் கதம் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

உயிரோடு இருக்கும் நடிகைக்கு இரங்கல் செய்தி வெளியிட்ட அவருக்கு கண்டனங்கள் குவிந்ததையடுத்து உடனடியாக பதிவை நீக்கிய அவர், ‘சோனாலி பிந்த்ரே குறித்து வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. அவர் ஆரோக்கியமான உடல்நிலையை பெறவும், விரைவில் குணமடையவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என மற்றொரு பதிவை வெளியிட்டார்.

இந்நிலையில் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சோனாலியில் கணவர் கோரிக்கை விடுத்துள்ளார். ‘ப்ளீஸ்... தயவு செய்து சமூக வலைத் தளத்தை அதிகப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தேவையில்லாமல் வதந்திகளைப் பரப்பாதீர்கள். பாதிக்கப் பட்டவர்களைக் காயப்படுத்தாதீர்கள். நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.
 

POST COMMENTS VIEW COMMENTS