திருமணத்துக்கு செல்போனுடன் வரக்கூடாது: ரன்வீர் - தீபிகா திடீர் கட்டுப்பாடு


பிரபல நட்சத்திர ஜோடிகளான ரன்வீர் சிங், தீபிகா படுகோன் திருமணத்துக்கு செல்போன் கொண்டு செல்ல கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

பாலிவுட்டின் டாப் ஹீரோயின் தீபிகா படுகோன். இவரும் பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங்கும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். விழாக்களுக்கு ஒன்றாக வரும் இவர்களின் நெருக்கம், ‘பத்மாவத்’ படத்துக்குப் பிறகு அதிகமாகி விட்டதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் இருவரும் அமெரிக்காவில் ஒன்றாக சுற்றிய புகைப்படங்கள் அவர்களின் நெருக்கத்தை உறுதிப்படுத்தின. இந்தக் காதல் பற்றி இருவரும் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. தீபிகாவிடம் திருமணம் பற்றி கேட்டபோது, ‘விரைவில் தெரியப்படுத்துகிறேன்’ என்றார். 

இந்நிலையில் தீபிகாவும், ரன்வீர் சிங்கும் நவம்பர் மாதம் 19ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். திருமணம் இத்தாலியில் நடக்க இருக்கிறது. இதை அவர்களுக்கு நெருக்கமானவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தத் திருமணத்துக்கு குடும்பத்தினர் உட்பட மொத்தம் 30 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளனர்.  திருமணத்துக்கு கையில் மொபைல் போனுடன் வரவேண்டாம் என்று அவர்களுக்கு மணமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணப் புகைப்படங்கள் கசிந்துவிடக் கூடாது என்பதற்காக இந்தக் கட்டுப்பாடு என்று கூறப்படுகிறது. 

திருமணம் முடிந்து இந்தியா வந்த பிறகு வரவேற்பு நிகழ்ச்சிக்கான தேதி அறிவிக்கப்படும் என்று இந்த நட்சத்திர ஜோடிக்கு வேண்டியவர்கள் தெரிவித்துள்ளனர்.


 

POST COMMENTS VIEW COMMENTS