விநாயகர் சதுர்த்தி பரிசாக ‘2.0’ டீசர்


ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்தின் டீசர் வரும் 13 ஆம் தேதி அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் பல மாதங்களாக தயாராகி வரும் திரைப்படம் ‘2.0’. இதில் ரஜினி நடித்துள்ளார். 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இதனை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரடெக்‌ஷன் வேலைகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. கடந்த வருடம் அக்டோபர்  மாதம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

இதனை தொடர்ந்து பல கட்டங்களில் படத்தின் புரமோஷன் செய்திகள் வெளியாகின. படத்தின் விஎஃப்எக்ஸ் வேலைகள் தாமதமாவதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போவதாக செய்தி வெளியானது. ஆனால் அதனை லைகா நிறுவனம் முன் வந்து விளக்கம் அளித்திருந்தது.

 இந்நிலையில் இயக்குநர் ஷங்கர், செப்டம்பர் 13 விநாயகர் சதுர்த்தி அன்று ‘2.0’ படத்தின் டீசரை வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல் கசிந்தது. ஆனால் அது குறித்து படக்குழு எதையும் உறுதிப்படுத்தவில்லை.

ஏற்கெனவே பலரும் எதிர்பார்த்ததை போலவே வரும் 13ம் தேதி டீசர் வெளியிடப்பட உள்ளதாக இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அந்த டீசர் 3டி தொழில் நுட்பத்தில் அமைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.. அதன் அனுபவத்தை காண தயாராகுங்கள் என்கிறது புதிய போஸ்டர்.

‘2.0’வில் நடிகை எமிஜாக்சன், அக்ஷய்குமார், சுதன்ஷு பாண்டே போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதற்கு ஜெயமோகன் திரைக்கதை எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வரும் நவம்பர் மாதம் 29ம் தேதி படம் திரைக்கு வரும் என்று ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருந்தது.

POST COMMENTS VIEW COMMENTS