377 தீர்ப்புக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய த்ரிஷா, வரு, கமல்ஹாசன்..!


தன்பாலின உறவு குற்றமல்ல எனும் தீர்ப்பிற்கு நடிகர் கமல்ஹாசன், நடிகைகள் த்ரிஷா, வரலக்ஷ்மி சரத்குமார் உள்பட ஏராளமான திரைப் பிரபலங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ஒரு பாலின உறவை குற்றம் என குறிப்பிடும் 377-வது சட்டப்பிரிவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், நடிகை த்ரிஷா எல்லோருக்கும் சம உரிமைக்கான பாதையில் இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது எனும் வகையில் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

தன்பாலினச் சேர்க்கை குற்றமல்ல என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ள அவர், வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் நன்றியை எதிர்பார்க்கவில்லை என்றாலும், இத்தீர்ப்புக்காக உரிமைகளை மதிக்கும் குடிமக்கள் சார்பாக நன்றி தெரிவித்து கொள்வதாகவும் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியனாக இருப்பதில் இன்று பெருமை கொள்கிறேன். நீங்கள் யாரை விரும்ப வேண்டுமென்று மற்றவர்கள் உங்களிடம் சொல்ல முடியாது. அது உங்களின் தனிப்பட்ட முடிவு.. நீங்கள் நீங்களாகவே இருப்பதில் பெருமை கொள்ளுங்கள். வாழ்க்கை ஒரேயொரு முறைதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சந்தோஷமாக இருங்கள்” என தெரிவித்துள்ளார்.
இதைபோல நடிகைகள் ப்ரீத்தி ஜிந்தா, சோனம் கபூர், ரன்வீர் சிங், கரண் ஜோஹர், அனுஷ்கா சர்மா என திரையுலக பிரபலங்கள் பலரும் தன்பாலின உறவு குற்றம் கிடையாது எனும் தீர்ப்பிற்கு பெரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS