கன்னட ஹீரோ நிகிலுக்கு திருமணமா? முதல்வர் விளக்கம்!


கர்நாடக முதலமைச்சர் ஹெச்.டி.குமாரசாமியின் மகன் நிகில் கவுடா. ’ஜாகுவார்’ என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். கன்னடம் மற்றும் தெலுங்கில் வெளியான இந்தப் படம் கவனிக்கப்பட்டது. அடுத்து ’முனிரத்னா குருஷேத்ரா’, ’சீதாராம கல்யாணம்’ ஆகிய படங்களில் நடித்துவருகிறார். 

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, குமாரசாமி சந்தித்தார். பின்னர் அங்கிருந்து சிறப்பு விமானத்தில் விஜயவாடாவுக்கு சென்றார். அங்குள்ள குடும்ப நண்பர், பொடேபுடி சிவ கோட்டேஸ்வர ராவை சந்தித்தார். பின்னர் ஆந்திர முதலமைச்சரை சந்தித்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சொந்த காரணங்களுக்காகவே ஆந்திராவுக்கு வந்தேன் என்று தெரிவித்திருந்தார்.

இது, அவர் மகன் நிகிலின் திருமணத்துக்கான சந்திப்பு என்றும் தொழிலதிபர் கோட்டேஸ்வர ராவின் மகள் சஹாஜாவை அவருக்கு திருமணம் பேசி முடிக்க சென்றதாகவும் கூறப்பட்டது. இந்த செய்திகள் வைரலானது.

இதுபற்றி முதலமைச்சர் குமாரசாமி கூறும்போது, ‘என் மகன் நிகில் திருமண விஷயமாக பேச, ஆந்திரா செல்லவில்லை. ஆனால், நிகிலுக்கு பெண் பார்த்துக்கொண்டிருப்பது உண்மைதான்’ என்று தெரிவித்துள்ளார்.
 

POST COMMENTS VIEW COMMENTS