ஹரிகிருஷ்ணா ரசிகர்களுக்கு எழுதிய கடிதம்


கேரள மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என மறைந்த தெலுங்கு நடிகர் ஹரிகிருஷ்ணா தனது ரசிகர்களுக்கு கேட்டுக்கொண்டு எழுதிய கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. 

முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவின் மகனும் நடிகருமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா  நெல்லூரில் ரசிகரின் திருமணத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பும்போது நல்கொண்டா அருகே அவரது கார் சாலைத்தடுப்பில் வேகமாக மோதி கவிழ்ந்தது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ஹரிகிருஷ்ணா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஹரிகிருஷ்ணாவின் உயிர் இன்று காலை பிரிந்தது. 

ஹரிகிருஷ்ணா வரும் செப்டம்பர் 2ஆம் தேதி 63 வது பிறந்தநாளை கொண்டாட இருந்த அவர், ரசிகர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கேரள மக்கள் ‌மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்றும் அன்றைய தினம் கேரள வெள்ள நிவாரணத்திற்கும் ஆந்திர மாநில வளர்ச்சிப் பணிகளுக்கும் தனது ரசிகர்கள் பணியாற்ற வேண்டும் என்று ஹரிகிருஷ்ணா கேட்டுக்கொண்டுள்ளார். இந்தநிலையில்தான் ஹரிகிருஷ்ணா தனது கைப்பட எழுதிய கடிதம் தற்போது வெளியாகியுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS