நடிக்க வாய்ப்பு தர மாட்டேங்கிறாங்களே? வில்லன் வருத்தம்!


சினிமாவில் நடிக்க இப்போது யாரும் அழைப்பதில்லை என்று நடிகர் மிலிந்த் சோமன் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

தமிழில், ’பச்சைக்கிளி முத்துச்சரம்’, ‘பையா’, ‘வித்தகன்’, ‘அலெக்ஸ் பாண்டியன்’ உட்பட சில படங்களில் வில்லனாக நடித்தவர், இந்தி நடிகர் மிலிந்த் சோமன். வயது 51.

 பிரபல மாடலான இவர், மைலேனி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் அங்கிதா கொன்வார் என்ற 18 வயது பெண்ணை மிலிந்த் காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் வயது வித்தியாசம் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது.இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் கவலையோடு பேட்டியளித்திருக்கிறார் மிலிந்த். அதில், சினிமாவில் நடிக்க வைக்க, தன்னை யாரும் அழைப்பதில்லை என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.

’தங்கள் படத்தில் என்னை நடிக்க வைக்க மறுக்கின்றனர். ஏன் என்னை அழைக்க தயங்குகிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் அதுதான் நிஜம். அவ்வப்போது எனக்கு சினிமா வாய்ப்புகள் வந்துகொண்டிருந்தன. நானும் நடித்துக்கொண்டிருந்தேன். நடிப்பதில் எனக்கு விருப்பம் அதிகம். அதிக வருமானம் வரும் வேலை, நடிப்பு. மற்ற நடிகர்களை போல நானும் அதை பெற்றுக்கொண்டிருந்தேன். ஆனால், சமீபத்தில் வாய்ப்பு ஏதும் வரவில்லை. கமர்சியல் சினிமாவில் நெட்வொர்க் முக்கியம். எனக்கு அப்படியொரு நெட்வொர்க் ஏதும் இல்லை. சினிமாவில் அதிமாக நண்பர்களும் இல்லை. எந்தவொரு பிசினஸுக்கும் நெட்வொர்க் முக்கியம்.

நான் அதிகமாக படங்கள் பார்ப்பதில்லை. வருடத்தில், மூன்று படங்கள் பார்த்தாலே அதிகம். அதுவும் சூப்பர் ஹீரோ படங்கள்தான். சினிமாவில் நடிக்க ஆசை கொண்ட எனக்கு படங்கள் பார்ப்பதில் விருப்பமில்லை. ஒருவேளை இந்தக் காரணத்துக்காகவே எனக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருக்கலாம்’ என்று கூறியுள்ளார் மிலிந்த்

POST COMMENTS VIEW COMMENTS