என்.டி.ராமராவ் மகனும் நடிகருமான ஹரி கிருஷ்ணா விபத்தில் பலி


ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்.டி ராமாராவின் மகனும், நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா கார் விபத்தில் இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 61.

ஆந்திர முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான என்.டி ராமாராவின், நான்காவது மகன் நந்தமுரி ஹரிகிருஷ்ணா. குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய இவர், பின்னர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து பணியாற்றினார். எம்.பி.யாகவும் இருந்துள்ளார்.

Read Also -> இந்து கடவுள்கள் பற்றி அவதூறாக பேசியதாக பிரகாஷ் ராஜ் மீது வழக்கு! 

Read Also -> டைரக்‌ஷன் வேலைகளில் இறங்கினார் தனுஷ்   

இவர் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கவாலி என்ற ஊரில் நடக்கும் ரசிகர் ஒருவரின் திருமணத்துக்காக இன்று அதிகாலை காரில் சென்று கொண்டிருந்தார். அவரே காரை ஓட்டிச் சென்றார். நலகொண்டா மாவட்டத்தில் உள்ள நர்கெட்பள்ளி - அட்டன்கி  நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று எதிர்பாராதவிதமாக சென்டர் மீடியனில் கார் மோதியது.

இதையடுத்து கார் தடுமாறி கவிழ்ந்தது. ஹரி கிருஷ்ணா தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை அடையாளம் கண்டு அருகில் உள்ள காமினேனி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

கடந்த 2014-ம் ஆண்டு நலங்கொண்டா அருகே நடந்த கார் விபத்தில்தான் ஹரிகிருஷ்ணாவின் மகன் ஜானகிராமும் மரணமடைந்தார். அவர் விபத்துக்குள்ளான இடத்துக்கு அருகிலேயே ஹரிகிருஷ்ணாவும் விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மறைந்த ஹரிகிருஷ்ணாவுக்கு கல்யாண் ராம், ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய மகன்களும் சுகாசினி என்ற மகளும் உள்ளனர். இதில் கல்யாண் ராமும் ஜூனியர் என்டிஆரும் ஆந்திராவின் டாப் ஹீரோக்கள். ஹரிகிருஷ்ணாவின் சகோதரர் பாலகிருஷ்ணாவும் பிரபலமான தெலுங்கு ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த ஹரிகிருஷ்ணா ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவி்ன் மைத்துனர் ஆவார்.

 


 

POST COMMENTS VIEW COMMENTS