டைரக்‌ஷன் வேலைகளில் இறங்கினார் தனுஷ் 


அடுத்த படத்தை இயக்குவதற்கான வேலைகளில் இறங்கி இருக்கிறார் நடிகர் தனுஷ். 

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் இயக்குநராக முதன்முறையாக அறிமுகமான திரைப்படம் ‘ப.பாண்டி’. முதலில் இதற்கு ‘பவர் பாண்டி’ என பெயர் வைக்கப்பட்டிருந்தது. இறுதி நேரத்தில் தலைப்பை மாற்றி வெளியிட்டது படக்குழு. இந்தப் படத்தின் மூலம் ராஜ்கிரண் தனது அடுத்த கட்ட பாய்ச்சலை சினிமா உலகில் தொடங்கினார். வசூல் ரீதியாகவும் இயக்கம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் 2017ம் ஆண்டு திரைக்கு வந்தது. இதனை இயக்கியதுடன் ராஜ்கிரணின் இளமை கால தோற்றத்திலும் தனுஷ் நடித்திருந்தார். இளமையானவர்களின் காதலை மட்டுமே அதிகம் பேசும் தமிழ் சினிமாவில் ஒரு வயதான ஜோடியின் காதலை காட்சிப்படுத்தி இருந்தது ‘ப.பாண்டி’. இதனை தொடர்ந்து தனுஷ் அவரது அடுத்த படத்தை எப்போது இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. 

தற்போது ‘மாரி2’ படத்தின் முழுப் படப்பிடிப்பையும் முடித்து கொடுத்திருக்கும் தனுஷ், தனது அடுத்த இயக்கத்திற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கி இருக்கிறார். அதற்கான நடிகர், நடிகைகளின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் தனுஷூக்கு அப்பா வேடத்தில் வேலராம மூர்த்தி நடிக்க இருந்ததாக தெரிகிறது. ஆனால் வேறு சில காரணங்களால் அவர் நடிக்கவில்லை. அவருக்குப் பதிலாக வேறு ஒரு முகத்தை தேடிக் கொண்டிருக்கிறது படக்குழு. தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கு தனுஷ் ஒரு படத்தை இயக்குவதாக ஏற்கெனவே ஒப்பந்தமாகி உள்ள நிலையில் அதற்கு இடையில் தனுஷ் தனது ஒவுண்டர்பார்  ஃபில்ம்ஸூக்காக இந்தப் படத்தை தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

POST COMMENTS VIEW COMMENTS