“ரஜினி படத்திற்காக ஒத்திகை பார்க்கிறேன்”- பாலிவுட் நடிகர் நவாஸுதீன் 


ரஜினியுடன் இணைந்து நடித்து வருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பாலிவுட் நடிகர் நவாஸுதீன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் ‘தலைவர் 165’. இதற்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக தலைப்பிடப்படவில்லை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மீனம்பாக்கம் பக்கம் உள்ள பின்னி மில் பகுதியில் நடைபெற்று வருகின்றது. அங்கே மிக பிரம்மாண்டமான அளவில் செட் போடப்பட்டுள்ளது. பெரிய தேவாலயம், மசூதி போன்ற காட்சிகள் அப்படியே தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் இப்படத்தில் பாலிவுட் ஆக்டர் நவாஸுதீன் சித்திக் நடித்து வருவதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வழக்கமான கேரவனில் உள்ள கண்ணாடி முன்பாக உட்கார்ந்து இருப்பதை போன்ற ஒரு புகைப்படத்தை அவர் அதில் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் அதில், “என்னுடைய முதல் தமிழ் படத்தின் வசன வரிகளை ஒத்திகை பார்த்து வருகிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதனையடுத்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ் சினிமா தங்களை அன்புடன் வரவேற்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், முனிஷ்காந்த், மேஹா ஆகாஷ் என பலர் நடித்து வருகின்றனர். இவர்களுடன் பாலிவுட் நடிகர் நாவாஸுதீன் சித்திக்கும் இணைந்திருக்கிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் நிறைவடைய உள்ளது எனத் தெரிகிறது.

POST COMMENTS VIEW COMMENTS