கேரளாவுக்கு ஒரு கோடி கொடுத்த திரைத் ‘தோனி’ !


வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் ரூ.1 கோடி நிதியை அவரது ரசிகர் பெயரில் அனுப்பியுள்ளார்.

கேரளாவில் வரலாறு காணாத மழை, வெள்ளம் காரணமாக கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இழப்பை சரிசெய்ய ரூ.2,500 கோடி ஆகும் என அரசு மதிப்பிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவில் நடிகர் ராகவா லாரன்ஸ், விஜய், கமல்ஹாசன், விஜய்சேதுபதி, சூர்யா, கார்த்தி, ரஜினிகாந்த், விஷால், விக்ரம் உட்பட பல நடிகர், நடிகைகள் நிதியுதவி அளித்துள்ளனர். தமிழக நடிகர்களில் ராகவா லாரன்ஸ் தான் அதிகபட்சமாக ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளார்.

தமிழக நடிகர்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள திரைப்பிரபலங்களும் நிதியை வழங்கியுள்ளனர். அந்த வகையில் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்த சுஷாந்த் சிங் பல சேவைகளை கேரளாவிற்காக செய்துள்ளார். அவர் தனது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அடங்கிய சில குழுக்களை கேரளாவின் சில மாவட்டங்களுக்கு அனுப்பியுள்ளார். அவர்கள் அங்கு நிவாரணப் பணிகள் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கேரளா வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் அந்தக் குழு செயல்பட்டு வருகிறது. இதற்காக சுஷாந்த ரூ.25 லட்சம் மதிப்புள்ள மருத்து, மாத்திரைகளை அனுப்பியுள்ளார். அத்துடன் மருத்துவ உதவி அல்லது நிதியுதவி வழங்க நினைப்பவர்கள், தங்கள் குழுவை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே சுஷாந்தை சமூக வலைத்தளத்தில் பின்தொடரும் அவரது ரசிகர் ஒருவர், “என்னிடம் பணம் இல்லை. ஆனால் கேரள மக்களுக்கு நான் உணவு வழங்க நினைக்கிறேன். நான் எப்படி உதவி செய்வது தயவுசெய்து சொல்லுங்கள்” எனக்கேட்டுள்ளார். இதையடுத்து அந்த ரசிகரின் பெயரில் ரூ.1 கோடியை சுஷாந்த் நிவாரணை நிதியாக கேரளாவிற்கு அனுப்பியுள்ளார். அத்துடன் ‘ஒரு கோடி ரூபாயை உங்கள் பெயரில் அனுப்பிவிடுகிறேன், அது எங்கள் மீட்புக்குழுவிடம் சென்று கேரள மக்களுக்கு சென்றுவிடும்” எனவும் தனது ரசிகருக்கு பதிலளித்துள்ளார். 

POST COMMENTS VIEW COMMENTS