வீட்டுக்குள் வெள்ளம்: சிக்கித் தவித்த தேசிய விருது பெற்ற நடிகர் மீட்பு!


வெள்ளத்தில் சிக்கிய தேசிய விருது பெற்ற மலையாள நடிகர் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். 

கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக மாநிலம் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் வீடுகளின் மாடி வரை வெள்ளம் சூழந்துள்ளது. இதனால் பலரும் மொட்டை மாடியிலும், கூரை களிலும் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்படுபவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த வெள்ளப் பாதிப்புக்கு பிரபலங்களின் வீடுகளும் தப்பவில்லை. நடிகர் ஜெயராம் குடும்பத்துடன் காரில் செல்லும் போது நிலச்சரிவில் சிக்கினார். பின்னர் அவர் பத்திரமாக மீட்கப்பட்டார். திருவனந்தபுரத்தில் நடிகர் பிருத்விராஜின் வீடும் வெள்ளத்தில் மூழ்கியது. அவரது அம்மா, மல்லிகா சுகுமாறன் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் நடிகை அனன்யாவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அவர் நடிகை ஆஷா சரத் வீட்டில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் சலீம் குமாரும் மழை வெள்ளத்தில் சிக்கிக்கொண்டார். இவர் ’ஆதாமிண்டே மகன் அபு’ என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றவர். தமிழில், ஆரியுடன் ‘நெடுஞ்சாலை’, தனுஷ் நடித்த ‘மரியான்’, ரோகிணி இயக்கியுள்ள ’அப்பாவின் மீசை’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

சலீம் குமார் கூறும்போது, ‘தண்ணீர் வீட்டுக்குள் வரத் தொடங்கியதுமே அங்கிருந்து வெளியேற முடிவு செய்தோம். ஆனால், அக்கம் பக்கத்து வீட்டினர் எல்லோரும் என் வீட்டில்தான் இருந்தார்கள் என்பதால் அவர்களுடனேயே இருந்துவிட முடிவு செய்தோம். நேற்று வீட்டுக்குள்ளும் தண்ணீர் வந்துவிட்டது. சில பத்திரிகைகளுக்கு போன் செய்து உதவி கேட்டேன். அவர்கள் மீட்புக் குழுவுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் பத்திரமாக அனைவரும் மீட்கப்பட்டுள்ளோம்’ என்றார்.

POST COMMENTS VIEW COMMENTS