கேரளாவில் வெள்ளத்தில் மூழ்கிய பிருத்விராஜ் வீடு!


கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக நடிகர் பிருத்விராஜின் சொந்த வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து அவரது அம்மாவை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.

கேரளாவில் கனமழை தீவிரமடைந்து வருகிறது. கடந்த 50 வருடத்தில் இல்லாத அளவு மழை பெய்துள்ளதால் 14 மாவட்டங்கள் வெள்ளத் தில் மிதக்கின்றன. மாநிலத்தில் உள்ள 39 நீர்த்தேக்கங்களில் 35 அணைகளும் திறக்கப்பட்டு உள்ளதால் கேரள மாநிலம் வெள்ளக்காடாக மாறியுள்ளது. சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. தண்டவாளங் களிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பல பகுதிகளில் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. 

மாநிலத்தின் பல பகுதிகளில் வீடுகளின் மாடி வரை வெள்ளம் சூழந்துள்ளது. இதனால் பலரும் மொட்டை மாடியிலும், கூரைகளிலும் தஞ்சம டைந்துள்ளனர். அவர்களை படகுகள் மூலம் மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்படுபவர்கள் தற்கா லிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த மழை வெள்ளத்துக்கு பிரபலங்களின் வீடும் தப்பவில்லை. திருவனந்தபுரத்தில் உள்ள நடிகர் பிருத்விராஜின் வீட்டுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்தது. இந்த வீட்டில் அவரது அம்மா மல்லிகா சுகுமாறன் வசித்து வருகிறார். மழை வெள்ளம் காரணமாக அவரது வீட்டை சூழ்ந்த வெள்ள நீர், வீட்டுக்குள்ளும் புகுந்துவிட்டது. 

இதையடுத்து மீட்புப் படையினர் அவர் வீட்டுக்குள் சென்று பிருத்விராஜ் அம்மாவை மீட்டு இடுப்பளவு தண்ணீருக்குள் மிதவையில் அழைத்து சென்றனர். பின்னர் பாதுகாப்பான இடத்தில் அவர் தங்க வைக்கப்பட்டார்.

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. திருமணத்துக்கு பிறகு பிருத்விராஜ் கொச்சியில் தனி பங்களா கட்டி அங்கு குடியேறியுள்ளார் என்பதால் இந்த வீட்டுக்கு அவர் எப்போதாவதுதான் வருவாராம். 


 

POST COMMENTS VIEW COMMENTS