வலைத்தளத்தில் கசிந்த விஜய்யின் ‘சர்கார்’ பாடல்


சமூக வலைத்தளத்தில் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ பாடல் திருட்டுத்தனமாக கசிந்துள்ளது.

நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘சர்கார்’. இதனை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். சென்னை படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து படக்குழு அமெரிக்க நகரான லாஸ் வேகஸ் சென்றிருந்தது. அங்கே இறுதிக்கட்ட பாடல் காட்சிகளை எடுத்ததாக கூறப்படுகிறது. அதற்காக நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் விஜய் உட்பட பலர் அமெரிக்கா சென்றிருந்தனர். அதனையடுத்து சில தினங்களுக்கு முன் சென்னை திரும்பிய விஜய், திமுக தலைவர் மு.கருணாநதியின் நினைவிடமான மெரினாவிற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். 

மாபெரும் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வரும் இப்படத்தினைப் பற்றிய செய்திகளை வெளியே கசியவிடாமல் பாதுக்காத்து வந்தது படக்குழு. இந்நிலையில் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ‘ரா..ரா..ராட்சசன்’ பாடலுக்கான வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் கசிந்துள்ளது. கருப்பின நடனக் கலைஞர்களை வைத்து மாடர்னாக எடுக்கப்பட்ட அந்தப்பாடல் ஏதோ ஒரு ‘கிளப் சாங்’போல் உள்ளது. 

அதில் விஜய்யின் ஆட்டம் மிகவும் இளமைத் துள்ளலுடன் உள்ளதால் அதனை அவரது ரசிகர்கள் வெறித்தனமாக பரப்பி வருகிறார்கள். அநேகமாக இந்தப் பாடல் விஜய்க்கு அறிமுகப்பாடலாக படத்தில் இடம்பெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்தப் பாடல் திருட்டுத்தனமாக வெளியானதால் படக்குழு சோகத்தில் ஆழ்ந்துள்ளது. ஒவ்வொரு முறையும் விஜய்யின் படக் காட்சிகள் இப்படி வலைத்தளத்தில் கசிவது வாடிக்கையாகி உள்ளது. இதனால் சினிமாதுறையின் வியாபாரம் பாதுக்காப்பு அற்றதாக மாறியுள்ளதாக பலர் கவலைத்தெரிவித்து வருகின்றனர். 

 

POST COMMENTS VIEW COMMENTS