“கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுத்திருக்காவிட்டால்...” - ரஜினிகாந்த் ஆவேசம்


திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம்கொடுத்திருக்காவிட்டால் போராட்டத்தில் இறங்கியிருப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

சென்னை காமராஜர் அரங்கத்தில் நடிகர் சங்கம் சார்பில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின், ரஜினிகாந்த் உள்ளிட்ட ஏரளமானோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், “கலைஞர் இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை. தமிழ்நாட்டில் இனி பெரிய விழா என்றால் தளபதி யாரை கூப்பிட போகிறார் என்று தெரியவில்லை. 50 ஆண்டுகளாக கழகத்தை கட்டிக் காத்த பெருமை கலைஞருக்கு உண்டு.

பழைய ஆட்களாக இருந்தாலும், புது ஆட்களாக இருந்தாலும் கலைஞர் இல்லாது அரசியல் செய்ய முடியாது எனும் நிலையை உருவாக்கியவர். அதிமுகவின் ஆண்டு விழாவில் எம்.ஜி.ஆர். புகைப்படத்தோடு, கருணாநிதி புகைப்படத்தையும் வைக்க வேண்டும். கலைஞர் இறுதி சடங்கின் போது ஏன் தமிழக முதல்வர் இல்லை?. கலைஞர் இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் வர வேண்டாமா? இதைப்பார்த்து மக்கள் வர வேண்டாமா? மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால், நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன்” என ஆவேசமாக தெரிவித்தார்.

 

POST COMMENTS VIEW COMMENTS