கவனக்குறைவால் விபத்து : விக்ரம், துருவ் நற்பணி மன்றம்


நடிகர் விக்ரமின் மகன், துருவ். இவர் தெலுங்கில் ஹிட்டான ’அர்ஜூன் ரெட்டி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். ’வர்மா’ என்ற இந்தப் படத்தை பாலா இயக்கியுள்ளார். இந்நிலையில், அவர் தனது நண்பர்கள் 3 பேருடன் காரில் சென்றுகொண்டிருந்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் வீடு அருகே சென்றபோது கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 3 ஆட்டோக்கள் சேதமடைந்தன. ஒருவர் படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து காரில் இருந்தவர்கள் ஓடிவிட்டனர். காயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது கால் முறிந்ததாகக் கூறப்படுகிறது  விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடியவர்களில் வருண் என்பவரை அங்குள்ளவர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மது போதை யில் இருந்த அவர் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். விபத்து பற்றி விசாரித்த போலீசார் விக்ரம் மகன் துருவை பிடித்து விசாரித்து வருகின்றனர். காரில் இருந்த அவர்கள் அனைவரும் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. விபத்தில் காயம் அடைந்தவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட விபத்து என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம் என விக்ரம் மற்றும் துருவ் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நற்பணி மன்றத் தலைவர் சூரிய நாராயணன் தெரிவித்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS