“அரசியல் பெருவாழ்வு நிறைந்த தலைவர்” - அஜித் புகழாரம்


திமுக தலைவர் கருணாநிதி சொல்வன்மை, மொழிப்புலமை, அரசியல் பெருவாழ்வு நிறைந்த தலைவர் என்று நடிகர் அஜித்குமார் கூறியுள்ளார்.

திமுகவின் தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான கருணாநிதி உடல்நிலைக்குறைவு காரணமாக உயிரிழந்தார். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை, நேற்று பின்னடைவை சந்தித்தது. இன்று மாலை மிகவும் கவலைக்கிடமானது. மாலை 6.10 மணியளவில் அவர் உயிரிழந்தார். அவரது இறப்பால் நாளை விடுமுறை என்றும், 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கருணாநிதியின் மறைவிற்கு பிரதமர், முதலமைச்சர் உள்ளிட்ட பல முக்கிய தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அத்துடன் திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கருணாநிதியின் மறைவுக்கு நடிகர் அஜித் குமாரும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முத்தமிழ் அறிஞர், மூத்த தலைவர், ஐந்து முறை தமிழக தலைவர் கருணாநிதி சொல்வன்மை, மொழிப்புலமை, அரசியல் பெருவாழ்வு, நிர்வாகத்திறன் நிறைந்த தலைவர்.

அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களுக்கும், என் சக தமிழக மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS