வரலாற்றுச் சின்னங்களை அழித்துவிட்டு சிவகார்த்திகேயன் படமா?: வலுக்கும் எதிர்ப்பு 


அரசுக்கு சொந்தமான கட்டிட சுவரில் வரையப்பட்டிருந்த வரலாற்று ஓவியங்களை அழித்துவிட்டு நடிகர் சிவகார்த்திகேயனின் சினிமா பட  விளம்பரம் எழுதப்பட்ட சம்பவம் சமூக ஆர்வளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை நகராட்சி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடந்த 2013 ம் ஆண்டு புதுக்கோட்டை நகர் முழுவதும் உள்ள  அரசு கட்டிட காம்பவுண்ட் சுவரில் புதுக்கோட்டை நகரத்தின் கடந்தகால வரலாற்றுச் சுவடுகளை ஓவியங்களாக நகராட்சி நிர்வாகம் வரைந்திருந்தது. இதில் பல்வேறு வரலாற்றுச் சம்பவங்கள் புதுக்கோட்டையின் பழங்கால பெருமைகளை விளக்கும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தது பொதுமக்கள் மத்தியில பெருத்த வரவேற்பை பெற்றிருந்தது.

 இந்நிலையில் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு சுவரில் வரையப்பட்டிருந்த ஓவியங்களை அழித்து விட்டு அந்த இடத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘சீமராஜா’ படத்தின் விளம்பரத்தை ஒரு சிலர் எழுதி கொண்டிருந்தனர்.இந்நிலையில் அந்த வழியே சென்ற சமூக ஆர்வளர்கள் விளம்பரம் எழுதப்படுவதை தடுத்து போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் ஓவியங்களை அழித்து திரைப்பட விளம்பரத்தை எழுதியவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அவர்களிடம் இருந்த பெயிண்ட் பிரஷ் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களிடம்  தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சுவரில் வரையப்பட்டிருந்த வரலாற்று ஓவியங்கள் அழிக்கப்பட்டதற்கு  சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு வைரலாக பரவி வருகிறது.இந்நிலையில் அழிக்கப்பட்ட வரலாற்று ஓவியங்களை மீண்டும் அதே சுவரில் வரைவதோடு, இது போன்று புதுக்கோட்டை நகர் முழுவதும் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் மீது விளம்பர போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வளர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS