சிவகார்த்திகேயனின் 'சை ஃபை' படத்தின் ஷூட்டிங் தொடங்கியது !


இன்று நேற்று நாளை எனும் டைம் மெஷின் படத்தை இயக்கிய ரவிகுமார் ராஜேந்திரன் தன்னுடைய அடுத்தப் படத்தை இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகநாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் ஏற்கெனவே ஒப்பந்தமாகியுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வரிசையாக படங்களை தயாரித்து வரும் 24 ஏ.எம். ஸ்டூடியோஸின் ஆர்.டி.ராஜா இந்தப்படத்தையும் தயாரிக்கிறார். இந்தப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இந்தப் படத்தில் யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படம் சை- ஃபை த்ரில்லராக இருக்கும் என ஏற்கெனவே இயக்குநர் ரவிக்குமார் ராஜேந்திரன் தெரிவித்திருந்தார். முதல் முறையாக ஏ.ஆர்.ரகுமான் , நீரவ் ஷா என மிகப்பெரிய தொழில்நுடப் கலைஞர்கள் சிவகார்த்திகேயன் படத்துக்கு பணியாற்றுவதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்தப் படம் சிவகார்த்திகேயன் இதுவரை நடித்ததிலேயே மிகப் பிரம்மாண்டமான பொருட் செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் நிறைய இருப்பதால், இந்தப் படம் 2019 ஆம் ஆண்டுதான் திரைக்கு வரும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS