நெல் சாகுபடி பாதிக்கும் ஆபத்து: திறக்கப்படுமா மேட்டூர் அணை?


காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் பெற்று தர வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆறுகளை தூர்வார விவசாயிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வறண்டு போன நீர் நிலைகள். ஆகாய தாமரைப் படந்த ஆறுகள். தண்ணீருக்காக தவமிருக்கும் விவசாயிகள். சாகுபடிக்கு தயாராகும் டெல்டா மாவட்ட விவசாயிகளின் நிலை இது. காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டு தோறும் குறுவை, சம்பா, தாளடி என்ற பருவங்களில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மேட்டூர் அணையிலிருந்து ஆண்டு தோறும் ஜூன் மாதம் தண்ணீர்திறப்பது வழக்கம். கடந்த 5 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் இந்த ஆண்டு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது ஒருபுறமென்றால், ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள் என நீர் நிலைகள் தூர்வாரப்படாத நிலையும் விவசாயிகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டாலும் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்ல முடியாத சூழல் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, நீர்நிலைகளை தூர்வார ஒதுக்கப்படும் நிதி முறையாக செலவிடப்படவில்லை என்பது டெல்டா மாவட்ட விவசாயிகளின் குற்றச்சாட்டு. எனவே, அவற்றை கண்காணிக்க, விவசாய பிரதிநிதிகள், உள்ளூர் விவசாயிகள், சமூகஆர்வலர்கள் அடங்கிய குழு அமைத்து நீர் நிலைகள் முறையாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயத்தையும், விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகளையும் கலைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்என்பதே டெல்டா மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

POST COMMENTS VIEW COMMENTS