அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு அளித்துள்ள வாக்குறுதிகள்...


விவசாயிகளின் நலன் சார்ந்து அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள வாக்குறுதிகளை பார்க்கலாம்.

அனைத்து வேளாண் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறு- குறு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யப்படும் என திமுக உறுதியளித்துள்ளது. தேமுதிக மக்கள்நலக் கூட்டணியும் விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது. பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும் என பாட்டாளி மக்கள் கட்சியும், விவசாயிகள் பெற்ற வங்கிக் கடன் மற்றும் வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்று பாரதிய ஜனதாவும் அறிவத்துள்ளன.

நெல் மற்றும் கரும்புக்கான ஆதாரவிலை உயர்த்தப்படும் என அதிமுக தெரிவித்துள்ளது. கரும்புக்கான ஆதாரவிலை 3 ஆயிரத்து 500 ரூபாயகவும், நெல்லுக்கான ஆதார விலை 2 ஆயிரத்து 500 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என திமுக உறுதியளித்துள்ளது.

கரும்புக்கான ஆதாரவிலை 4 ஆயிரம் ரூபாயாகவும் நெல்லுக்கான ஆதாரவிலை 2 ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரிக்கப்படும் என தேமுதிக,பாட்டளி மக்கள் கட்சி,பாரதிய ஜனதா ஆகிவை கூறியுள்ளன.

நாம் தமிழர் கட்சியோ, வேளாண் துறைக்கு நலவாரியம் அமைத்து விலை நிர்ணயம் செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளது.

வேளாண் துறைக்கென்று தனி நிதிநிலை அறிக்கைஆண்டு தோறும் அறிவிக்கப்படும் என திமுக - பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பாரதிய ஜனதா தெரிவித்துள்ளன. தனிநிதிநிலை அறிக்கை உறுதி மொழி அதிமுக தேமுதிக அறிக்கையில் இடம்பெறவில்லை.

இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும் என உறுதியளித்துள்ள அதிமுக மரபணு மாற்றுப்பயிருக்கு தடை என அறிவித்துள்ளது. திமுகவோ, தனது தேர்தல் அறிக்கையில்,இயற்கை விவசாயத்திற்கு தனிப்பிரிவு, ஆய்வு மையம் அமைக்கப்படும் என கூறியுள்ளது. தனித்துறை ஏற்படுத்தப்படும் என கூறிய தேமுதிக இயற்கை விவசாயத்திற்கு மானியம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.தனி நிதிநிலை அறிக்கை, மரபணுமாற்றப்பயிர்களுக்கு தடை என பா.ம.கவும் கூறியுள்ளது. இயற்கை விவசாயத்திற்கு தனிக்கொள்ளை, விதை வங்கி உருவாக்கப்படும் என பாரதிய ஜனதாவும், ஊக்கத்தொகை மற்றும் அரசு ஆலோசனை வழங்கப்படும் என நாம் தமிழர் கட்சியும் உறுதியளித்துள்ளன.

வேளாண் இடுபொருட்களுக்கு சுழல்நிதி அதிகரிக்கப்படும் என அதிமுகவும் முழு மானியம் வழங்கப்படும் என திமுகவும் கூறியுள்ளன. 50 சதவிகிதம் மானியம் வழங்கப்படும் என தேமுதிகவும், உரம் பூச்சி மருந்து, விதை இலவசம் என பாமகவும் தெரிவித்துள்ளது. இயற்கை விவசாயத்திற்கு இடுபொருள் இலவசம் என பாரதிய ஜனதா கூறியுள்ளது நலிந்தோர்க்கு குறைந்த விலையில் இடுபொருள் வழங்கப்படும் என நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS