வடகிழக்கு பருவமழை எப்படியிருக்கும்?: வேளாண் காலநிலை ஆராய்ச்சியாளர்கள் கருத்து


தமிழகத்தில் வரவிருக்கும் வடகிழக்கு பருவமழை காலத்தில், 84 சதவிகித மாவட்டங்களில் சராசரி மழையளவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் விவசாயிகள் காலநிலைக்கு ஏற்ற பயிர்களையிட்டு அதிக விளைச்சலை பெறலாம் என கோவையில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள வடகிழக்கு பருவமழை முன்னறிவிப்பின்படி, காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர், தூத்துக்குடி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களிலும் சராசரி மழையளவு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சராசரி மழை அளவு எதிர்பார்க்கப்படும் இடங்களில் தற்போதைய வேளாண் தொழில்நுட்பங்களை வானிலை சார்ந்த வேளாண் அறிவுரைகளுடன் பயிர் சாகுபடி மேற்கொள்ளலாம் எனவும், குறைவான மழை பெய்யும் பகுதிகளில் பாசன நீர் அளவை பொறுத்து பயிர் சாகுபடி செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் அதிகளவிலான வறட்சி நிலவி வந்ததால் விவசாயம் பொய்த்து போனதன் காரணமாக அதனை ஈடு செய்யும் வகையில் இந்த ஆண்டு மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 756 மில்லி மீட்டர் மழையளவும், குறைந்த பட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 262 மில்லி மீட்டர் மழை அளவும் பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS