ஷேல் கேஸ் பூமிக்கடியிலிருந்து எடுக்கப்படும் முறை...


உலகின் எரிசக்தி தேவை அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. உயர்ந்து வரும் எரிசக்தி தேவையை சமாளிக்க மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்தது தான் ஷேல் கேஸ்(SHALE GAS) எனப்படும் பாறை எரிவாயு. பூமிக்கடியிலிருந்து ஷேல் எரிவாயு எடுக்கப்படும் முறைகள்..

நில மட்டத்திலிருந்து 2 முதல் 3 கிலோ மீட்டர் ஆழத்தில் படிம வடிவில் உள்ள ஒருவகை பாறைகள் ஷேல்(Shale) பாறைகள் என்றழைக்கப்படுகின்றன. அடுக்கடுக்காக உள்ள இப்பாறைகளின் உள்பகுதியில் உள்ள எரிவாயுவே SHALE எரிவாயு என்று அழைக்கப்படுகிறது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பூமியில் இருந்து பின்னர் மக்கிய விலங்கினங்கள், மரங்கள் உள்ளிட்டவை காலப்போக்கில் வேதிமாற்றம் அடைந்து பாறை இடுக்குகளில் எரிவாயுவாக தங்குகின்றன.

இந்த எரிவாயுவை எடுப்பது மிகவும் கடினமான ஒன்றாக இருந்த நிலையில், தற்போது நவீன தொழில்நுட்பங்கள் மூலம் இதை எடுப்பது எளிதாகியுள்ளது. பூமிக்கு அடியில் ஏழாயிரம் அடி முதல் 15 ஆயிரம் அடி வரை செங்குத்தாக ஆழ்குழாய் துளை ஏற்படுத்தப்பட்டு அதற்கு கீழே பக்கவாட்டில் நாலாபுறமும் குழாய்கள் செலுத்தப்படும்.

இக்குழாய்களில் வெடிபொருட்களும் செலுத்தப்பட்டு பாறைகளில் விரிசல் ஏற்படுத்தப்படுகிறது. இதன் பின்னர் குழாய் வழியே தண்ணீரும் வேதிப்பொருட்களும் உயர் அழுத்தத்தில் செலுத்தப்பட்டு பாறைகளை முழுமையும் உடைத்து எரிவாயு வெளியே எடுக்கப்படுகிறது.

இது நீராற்றல் முறிப்பு அதாவது ஃப்ராக்கிங் முறை எனப்படுகிறது. பாறைகளுக்குள் மறைந்துள்ள இந்த எரிவாயு 1800-ம் ஆண்டுகளிலேயே கண்டறியப்பட்டாலும் 1970-ம் ஆண்டுகளில்தான் வணிக ரீதியில் எடுக்கப்பட்டது.

சீனாவில் இவ்வகை எரிவாயு அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும் இந்த எரிவாயுவை எடுப்பதில் அமெரிக்காதான் தற்போது முன்னணியில் உள்ளது.

ஷேல் எரிவாயுவை அதிகளவில் எடுப்பதன் மூலம் 2020-ம் ஆண்டில் அமெரிக்கா தனது எரிசக்தி தேவை முழுவதையும் தானே உற்பத்தி செய்யும் நிலை உருவாகும் என கூறப்படுகிறது. இதை பின்பற்றியே, ஷேல் எரிவாயு உற்பத்தியில் களமிறங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS