டன்னுக்கு 4000 ரூபாய் வழங்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு டன் கரும்புக்கு 4 ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச ஆதார விலையாக வழங்க வேண்டும், நிலுவைத் தொகை 150 கோடி ரூபாயை உடனே வழங்க வேண்டும், கூட்டுறவு ஆலைகளின் கடனான் ரூபாய் 1800 கோடியை தமிழக அரசே ஏற்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன் வைத்தனர்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 108 கரும்பு விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் சார் ஆட்சியர் அலுவலகத்தை 200க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் முற்றுகையிட முயன்றனர்.

தொடர்ந்து பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாகப் புறப்பட்டவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் தனியார் சர்க்கரை ஆலையை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகளைக் காவல்துறையினர் கைது செய்தனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே கரும்பு விவசாயிகள் கரும்புகளை ஏந்திக்கொண்டு சாலை மறியல் செய்தனர்.

POST COMMENTS VIEW COMMENTS