திருவாரூர் அருகே ஓஎன்ஜிசி குழாயில் ரசாயனக் கசிவு: விளைநிலம் பாதிப்பு


திருவாரூர் அருகே ஓஎன்ஜிசி குழாயில் ‌இருந்து ஏற்பட்ட ரசாய‌னக் கசிவால் 5 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள உளுந்துப் பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.

தென்கரை அருகேயுள்ள வேலங்குடியில் விளைநிலம் வழியாக ஓஎன்ஜிசி குழாய் செல்கிறது. அந்த குழாயில் ஏற்பட்ட விரிசல் காரணமாக அதில் இருந்து வெளியேறும் ரசாயனத்தால் விளைநில‌‌ம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.

இந்த ரசாயனத்தால், நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து பயிர் கருகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், நண்டு போன்‌ற உயிரினிங்களும் இறந்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.

இதனால், விளைநிலத்தின் வழியாக பதிக்கப்பட்டுள்ள குழாய்களை அகற்ற வேண்டும் என்றும், சேதமடைந்த பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓஎன்ஜிசி நிறுவனம் மறுப்பு

இதனிடையே, வேலங்குடியில் உடைப்பு ஏற்பட்டுள்‌ள ஓஎன்ஜிசி குழாய் வழியாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்‌ மட்டுமே செலுத்தப்படுவதாக அந்த நிறுவன அதிகாரி கணேசன் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் குற்றம்சாட்டுவது போல் எண்ணெய் மற்றும் சுத்திரிகரிக்கப்படாத தண்ணீர் அந்த குழாய்களில் செலுத்தவில்லை என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும், உடைப்பு ஏற்பட்ட பகுதியில் ஓஎன்ஜிசி அதிகாரிகள் ஆய்வு நடத்தியதாகவும், சிறிதளவே விளைநிலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கணேசன் தெரிவித்தார்.

இதனிடையே, சம்பந்தப்பட்ட இடத்தில் விரிவான ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மீண்டும் இது போன்ற விபத்துகள் நடைபெறாத‌வகையில் செயல்பட ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS